Saturday, December 14, 2024

தமிழ்ப் பெயர்கள் - பொருள் தேடல்

 தமிழ்ப் பெயர்கள் 

தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பெயர்களில் ஒருவரின் பெயர் முல்லை என்றோ இனியவன் என்றோ காணும்போது அப்பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாகவும் பொருள் பொதிந்தவையாகவும் இருக்கின்றனவே என்று பலரால் பாராட்டப்படுவதைக் காண்கிறோம். 

மாறாக, வசந்த், குரோசி போன்ற பெயர்கள் குறை கூறப்படுவதையும் காண்கிறோம். மேலும், ஆராதனா, லெனின், டேவிட், நியூட்டன் என்பவை பிற மொழிப் பெயர்கள் என்று சித்தரிக்கப்படுவதையும் காண்கிறோம். இந்த நிலைமையையும் அதனால் ஏற்படும் உளைச்சல்களையும் எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்.


ஒருவரின் பெயரை இன்னொருவர் அறியும்போது அந்தப் பெயருக்குப் பொருள் என்னவாக இருக்கும் என்று சிலருக்கு ஒரு கேள்வி தோன்றும். தமிழில் ஏற்கனவே இருக்கும் ஒரு சொல்லினால் ஆன பெயராக இருந்தால் மகிழ்வோடு நல்ல பெயர் என்று புளகாங்கிதம் அடைகிறோம். அதாவது முல்லை என்று ஒரு பெண்ணிற்குப் பெயர் இருந்தால், ஆகா, இது முல்லைச் செடியின் பெயர், நல்ல தமிழ்ப் பெயர் என்றுணர்வோம். 

இப்படிப்பட்ட பெயர்கள் தமிழ் மக்களுக்கு இருப்பது நன்றே. உதாரணமாக சில பெயர்கள் இங்கே.

கொடி, அழகி, மலையன், மழையன், அருவி, முருகன், வெயிலோன், பகலவன்.


இத்தகைய பெயர் சூட்டும் பழக்கம் எங்களிடையே அதிகரிக்க வேண்டும். பொருளோடும், அழகோடும், மொழி இலக்கணத்தோடும் இப்பெயர்கள் இருக்கும் போது எல்லோருக்கும் மகிழ்ச்சி, திருப்தி.


ஆனால், இப்பொழுது, தமிழில் பொருள் உள்ள பெயர்கள் தவிர வடமொழி இலக்கியங்களிலும், புராணக் கதைகளிலும் காணப்படும் பெயர்களைத் தமிழர் வைத்துக்கொள்ளும் வழக்கம் மிக அதிமாக உள்ளது.


உதாரணத்திற்கு ஒரு பெயரைப் பார்ப்போம். லக்ஷ்மன்


பல தமிழர்கள் வைத்துகொள்ளும் ஒரு பெயர். இந்தப் பெயர் இராமாயணத்தில் ஒரு பாத்திரமாகும்.

ஆனால், வடமொழியைத் தவிர்த்தும், தமிழ் மரபைப் பேணியும், தமிழ் தொய்வடையாமல் இருக்கவும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் லக்ஷ்மனா என்றிருந்த பெயரை இலக்குவன் என்று தமிழில் தான்  உருவாக்கிய கம்பராமாயாணத்தில் குறிப்பிட்டார்.  அதாவது அந்தப் பெயரை தமிழ்ப் பண்பாட்டிற்குக் கொண்டு வந்தார். இது போன்றவையே சீதை (சீதா), இராமன்(ராமா), அனுமான்(ஹனுமன்), விபீடணன்(விபீஷணா), இராவணன்(ராவணா), சனகன்(ஜனகன்), சானகி(ஜானகி). 

இப் பெயர்களின் பொருளை வடமொழி இலக்கியத்தில் இருந்து கொடுத்தாலும், தமிழில் அழகாக பெயர் வைக்கும் முறையை கம்பர் எடுத்துக் கையாண்டிருக்கிறார். 


இலக்குவன் என்ற பெயரைக் கொண்ட ஒரு தமிழரிடம் அதற்கான பொருள் ஏதுமுண்டா என இன்னொருவர் கேட்கலாம். அதற்கான பதில்கள், இவ்வாறாக இருக்கலாம்.


  1. பொருள் ஏதும் இருக்கலாம் ஆனால் எனக்குத் தெரியாது.

  2. இலக்கு என்றால் தமிழில் அடையவேண்டிய ஒரு நிலை, அப்படிப் பார்க்கும்போது இலக்கு என்பதிலிருந்து பொருள் பெறலாம்..

  3. இது லக்ஷ்மனா என்ற வடமொழிப் பெயரிலிருந்து தமிழாக்கஞ் செய்யப்பட்ட பெயர், அம்மொழியில் பொருள் இருக்கலாம்.

  4. வடமொழியில் லக்ஷ்மனா என்றால் அதிட்டமுடையவன் என்று பொருள். அதையே தமிழாக்கி இடப்பட்டுள்ளது.

  5. மேலும் ஏதாவது ஒரு மொழியில் இதற்கு நெருக்கமான ஒரு சொல்லைக் கொண்டும் பொருள் சொல்லலாம்


இந்தப் பதில்கள் எல்லாமே அவரவர் விளக்கத்திற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே. ஆக, பொருள் வேண்டுவோருக்குப் பொருள் தரலாம், வேண்டாதவர்களுக்கு அது தமிழில் எழுதப்பட்ட ஒரு சொல். தமிழின் தரம் குறையாமல் இருக்கும் ஒரு பெயர்.


ஆனால் இதையே லக்ஷ்மன் என்று தமிழில் எழுதிப் புழங்கும் போது தமிழின் சுவையும், தரமும் இழக்கப்படுகின்றன. இந்த நிலை தவிர்க்கப்படலாம்.


ஆனால், ஒருவருக்கு இடப்படும் பெயருக்குப் பொருள் இருக்கத்தான் வேண்டுமா?


ஒருவரை அடையாளப்படுத்த அவருக்கு இடப்படும் பெயர் அவரின் மொழியில்  தவிர்க்கப்பட வேண்டிய சொல்லாக இருக்காத நிலையில் எந்தவொரு பெயரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.

உதாரணமாக; கதரன், மோரியன், மதினி, விபுலி, தகாதி, தேமன் போன்றவை.

இவை தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒன்றுகூட்டி, தமிழிற் சொற்கள் அமைய வேண்டிய அடிப்படை இலக்கணத்தை மீறாமல் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்கு வெளிப்படையாகப் பொருள் தெரியவுமில்லை. இருந்தும் இவற்றை நாம் மக்களுக்குப் பெயராகக் கொள்வதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுசி, சசி, நிசா போன்ற பெயர்களில்  பொருள் ஏதும் வெளிப்படையாகத் தெரியவில்லை.


இன்னொரு உதாரணமாக, ஒருவருக்குக் குண்டர் என்று பெயர் இருந்தால், அதற்கான பொருளாக, குண்டு என்ற தமிழ்ச் சொல்லைக் கொண்டு உருவாக்கிய பெயர் என்று சொல்லலாம். இதையே ஒரு நோர்வே மொழிப் பழக்கம் உள்ளவர் சிந்திக்கையில் வாடிக்கையாளர்கள் (kunder) என்ற நோர்வே சொல்லுக்குத் தொடர்புபடுத்தலாம்.


இன்னொரு பெயர் மணி என்பதைக் கருத்தில் எடுப்போம். தமிழில் ஓசையெழுப்பும் மணி அல்லது தானிய மணிகள் என்று பொருள் கொடுக்கலாம். வடமொழியில் ஆபரணம், மாணிக்கக் கல் போன்று பொருள். ஆங்கிலத்தில் சொல்லிப் பார்த்தால் “காசு”. இப்படியாகப் பல பொருள்களை நாம் எடுத்துக் கூறலாம்.


பொருள் தேடாவிட்டால்,  தமிழில், மணி, அது ஒரு பெயர் அவ்வளவே. மாணி கூட ஒரு பெயராகலாம்.


ஆக, ஒருவரின் பெயருக்குப் பொருள் தேடப் புறப்பட்டால் எத்தனை மொழிகளில் புலமை உள்ளதோ அத்தனை பொருள்கள் காணப்படலாம். எனவே, பெயருக்குப் பொருள் தேடல் என்பது அத்துணை அவசியமானதில்லை.


இவ்விடத்தில் ஒரு வேற்று மொழி உதாரணத்தைக் கூறலாம். பின்லாந்தில் உள்ள ஒருவரின் பெயர் “தாவி” (Taavi). அப்பெயரை விளக்கமுடியுமா என அவரிடம் கேட்டபோது, அவர் சொன்னார். David என்ற கிறிஸ்தவப் பெயரின் பின்லாந்து மொழி வடிவமே அது என்று. இது தமிழிலும் முன்னர் தாவீது என்று இருந்தது நினைவுக்கு வருகிறதே.


தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விவிலிய நூலிலும் குரானிலும் அவற்றின் மூல நூலிலிருந்த பெயர்கள் நல்ல தமிழாக்கஞ் செய்யப்பட்டு எழுதப்பட்டிருந்தன. காலப்போக்கில், தமிழர்கள் அவற்றை மறந்து வருகின்றனர். விவிலியம், பைபிள் என்று எழுதப்படுகிறது.

ஏசு நாதரின் பெயர் மூல நூலில் ஏசு என்று ஒலிக்கும். உரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்டபோது  Jesus. இது அனேகமான ஐரோப்பிய மொழிகளில் Yesus என்றே உச்சரிக்கப்படும். பின்னர் ஆங்கிலத்தில் அது ஜேசு ஆகிப் பின்னர் ஜீசஸ் என்றும் ஆகி விட்டது.


பிற மதங்கள், பிற பண்டைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள் தவிர, இப்பொழுது பிற மொழிப் பெயர்கள் தமிழர் இட்டுக் கொள்வதையும் காணலாம்.

உதாரணமாக; ஜேசன், ஜோன்சன், அண்டனி, வில்லியம், ரோசா, ரோஜா

இவற்றில் கிரந்தம் தவிர்க்க விரும்பினால், சேசன்/யேசன், சோன்சன்/யோன்சன் என்று எழுதலாம். ரோசாவை  உரோசா என்று தமிழ் இலக்கணம் கெடாமல் எழுதலாம்.


ஆனால் இவையெல்லாம் அவசியமற்றவை என்றும் தமிழில் காணப்படும்  கிரந்தம் உட்பட்ட எல்லா எழுத்துகளாலும், தமிழ் இலக்கணத்தைப் பற்றி கவலை கொள்ளாமலும் பெயர்களை தேவையானவர்கள் எழுதிக்கொள்ளலாம். தடையுமில்லை குற்றமுமில்லை. ஆனால் தமிழ் நன்றாகத் தொனிக்காது.


ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுத வேண்டும் என்று அவசியமில்லை. இதேபோல், தமிழ்ப் பெயரையும் அப்படியே ஆங்கிலத்தில் எழுதவேண்டியதுமில்லை. தமிழ்ப் பெயரை ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்ப நாங்கள் எழுதி வைத்துகொண்டிரும்போது, அதை, பிரெஞ்சு மொழிக்காரரோ அல்லது பின்லாந்து மொழிக்காரரோ வாசிக்கும்போது அது அவர்கள் மொழி உச்சரிப்பில் வேறு பெயராகிவிடும்.


இப்போது, எண்கணிதச் சாத்திரம் பார்ப்பவர்கள், புதிதாகப் பெயர் வைக்கும் போது, ஆங்கிலத்தில் அப் பெயரை எழுதிக், குறிப்பிட்ட ஒரு எண் கிடைக்கும் வகையில் எழுத்துக்களை மாற்றியோ, இரட்டிப்பாக்கியோ அல்லது ஓசையில்லா எழுத்துக்களை உள்வாங்கிய ஒரு பெயரை உருவாக்கி விடுகிறார்கள். அந்தப் பெயரை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அது நாம் நினைத்து வைக்கப்பட்ட பெயர் போல் இருப்பது கடினமே.


உதாரணமாக, பிரதாபன் என்று பெயரை வைக்க விரும்பியவர், ஆங்கிலத்தில் எழுதும் போது இப்படியெல்லாம் வரலாம்.

Pirathaapan, prathaapan, prathapan, pirathaphan, piirathapan, pirathaban, prathabhan, pradhaban, Brathapan, …..

இந்தப் பெயர்களை ஆங்கிலத்தில் வாசிக்க முயல்வோர் பெருந்  தொல்லைக்காளாவார்கள்.


இன்னொரு பெயரான, கோகுலன் என்ற பெயரை எடுத்துக் கொள்வோம். இதை நாம் ஆங்கிலத்தில் எழுத முயலும்போது Koghulan என்று தமிழ் உச்சரிப்புக்கு அமைய எழுதலாம். ஆனால் வடமொழிப் பரிச்சியம் உள்ளவர்கள் அதை Gokulan என்று எழுதவும் உச்சரிக்கவும் முயலும்போது பிரச்சனை வந்து விடும்.

இந்தச் சிக்கல் பல பெயர்களில் உண்டு. சில எடுத்துக்காட்டுகள் இதோ.


கணேஸ் - Kanes - Ganesh

பாலா - Pala - Bala

கிரிதரன் - Kiritharan - Giritharan

காயத்திரி - Kayathri - Gayathri


எனவே தமிழரின் பெயரைத் தமிழில் எழுத வேண்டும். தேவைப்படும்போது, பிற மொழியாளருக்கு அவர்களின் மொழியையும் அதன் உச்சரிப்பு முறையயும்  அறிந்து தமிழ்ப் பெயர்களை அவற்றிற்கு ஏற்ப எழுதிக் காட்டலாம்.


நோர்வேயில் வாழ்ந்து வரும் தமிழர் உதயன். அவர் நோர்வேயில் இருக்கும்போது, தன் பெயரை Oddean என்றே எழுதுவார். நோர்வே உச்சரிப்பில் அது உதயன் போல் ஒலிக்கும்.


ஆக மொத்தத்தில், ஒருவரின் பெயர் என்பது அவரின் மொழிக்கும், பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இருப்பது சாலச் சிறந்தது. மற்றவருக்கேற்ப பெயர்களை அமைக்க எண்ணுவது தவிர்க்கப்பட வேண்டும்.


----- வளர் சஞ்சிகைக்காக எழுதப்பட்டது ----

No comments: