ஈழத்தில் பிறந்து வளர்ந்த போது கண்ட கலை இருப்பும் மக்களின் பங்களிப்பும் எப்படி இருந்தன என்பதைப் பார்க்கும் ஒரு பதிவு.
யாழ்ப்பாணத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து வரும் வேளையில், பள்ளிக்கூட வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பமாகிறது. சிறு வயதில் நடந்தவை எல்லாமே ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் அசை போட்டுப் பார்க்கும் போது தோன்றுபவை கொஞ்சம் சிந்தையைத் தூண்டுபவையாக இருக்கின்றன.
மூன்றாம் வகுப்பளவில் அதாவது 9 வயதளவில், மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகளுக்குப் பங்களிக்கத் தொடங்குவார்கள். சிறு மேடைப் பேச்சு, பாட்டு போன்றவை தான் அதிகமாக இடம்பெறும் நிகழ்ச்சிகள். பாட்டு என்றால் திரைப்படப் பாடல்கள் அல்ல, பாடசாலையில் கற்கும் பாட சம்பந்தமான பாடல்கள், சில வேளைகளில் தேவாரங்கள்.
நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்ற ஞாபகமே இல்லை.
நாடகங்கள் பள்ளிக்கூட மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற ஞாபகம் இல்லை. ஆனால் வட்டார, மாகாண நிலைகளில் இடம்பெறும் போட்டிகளுக்கு அவ்வப்போது நாடகங்கள் பழகி அவை எடுத்துச் செல்லப்படும்.
இப்படியான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் மாணவர்கள் அதிகமாக ஆதிக்க சாதியல்லாத பிள்ளைகளாக இருப்பதை நினைவு கூருகிறேன். காரணம் என்னவென்றால், இப்படியான காட்சி நிகழ்ச்சிகள் ஒரு வகை இழுக்கு என்ற மன நிலை ஆதிக்க சாதியில் நிலவியதாக எண்ணம். அத்தோடு, இதில் செலவிடும் நேரம் படித்துச் சாதிக்கச் செலவிடப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணமும் தான். கலையென்றோ மேடை நிகழ்வென்றோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இவையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தான் சரி என்ற மனப்பாங்கு.
பாடசாலையில் இவ்வாறாக இருக்கும்போது, பாடசாலைக்கு வெளியே எப்படி இருந்தது கலை ஈடுபாடு என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
ஊரில் உள்ள பல கோயில் திருவிழாக்களில், தவில், நாதசுவரம், கதாப்பிரசங்கம், வில்லுப்பாட்டு, பின்னர் இசைக் குழுக்கள் கடைசியாக சின்ன மேளம் என்று அழைக்கப்படும் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவை யாவுமே கோயிலின் வெளியே மேடை அமைக்கப்பட்டு அதிலே இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சிகளை கோவிலுக்கு வெளியே வைத்ததன் காரணத்தை இப்போது எண்ணிப் பார்த்தால் அங்கு மறைந்திருக்கும் உண்மை கசிகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சிகளை வழங்குபவர்களில் பலர் ஆதிக்க சாதியல்லாதவர்கள். அவர்களை எப்படி உள்ளே விடுவது?
அதுபோக, இங்கே காணப்பட்ட கலைஞர்களும் எங்கள் பாடசாலை வழக்கத்தில் வந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கலை ஈடுபாடோ, கலை வளர்க்கும் ஆர்வமோ ஒடுக்கப்பட்டவர்களிடையே தான் மிளிர்ந்திருந்தது.
இவை தவிர, மேடை நாடகங்கள், நாடக விழாக்கள் என்பவற்றில் பல நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றை நன்கு எண்ணிப் பார்க்கும்போது, பெயர் பெற்ற நாடகக்காரர்களும், நடிகர்களும் ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்தே தோன்றியிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது.
எப்படியாக எங்கள் சமூகம் இருந்திருக்கிறது என்பது சிந்திக்க வைக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை காணப்பட்ட இந்த நிலை பின்னர் மாறத் தொடங்கியது. சங்கீதம், பரத நாட்டியம், நடனம் என்பவை எல்லோரிடமும் உள்வாங்கப்பட்டன. கொஞ்சங் கொஞ்சமாக கலை ஈடுபாடும், கலை வளர்க்கும் ஆவலும் எல்லோரிடமும் இப்பொழுது வந்து விட்டது. கூத்தாடிகள் என்று முன்னர் இழிவாகப் பேசப்பட்டவர்கள் இப்போது அங்கீகாரம் பெற்றுள்ளதும், அந்தக் கூத்துக் கலைகளில் எல்லோரும் பங்குபெறக் காட்டும் ஆர்வமும் மிக நல்ல நிலைக்குக் கலையை எடுத்துசெல்வது மகிழ்ச்சி தான்.
No comments:
Post a Comment