நாயக்கா
இலங்கையில் சிங்களவரிடையே காணப்படும் பெயர்களில் பண்டாரநாயக்கா, சேனநாயக்கா, திஸாநாயக்கா போன்ற பெயர்கள் எங்களுக்குப் பழக்கமான சில. இவற்றில் சாதிகள் இருப்பதாகப் பலர் விளங்கிக்கொள்வது வேடிக்கையான ஒன்று. அதாவது இந்தியாவில் இருக்கும் நாயக்கர் என்ற சாதியினரில் இருந்து வழிவந்த மக்கள் தான் மேற் கூறிய பெயர்களுக்குரியவர்கள் என்று சில இந்தியர்கள் நினைக்கிறார்கள். ஓரிருவர் அப்படி இருக்கலாம். ஆனால் பெருவாரியானவர்கள் அப்படி அல்ல. சிங்களவர்களில், யாரும் நாயக்க சாதியால் அடையாளம் காணப்படுவதும் இல்லை.
இலங்கையர் பெயர்களில் இந்தச் சாதிப்பெயர்கள், சாதி என்று குறிப்பிடாமல் ஒரு பெயராகப் பயன்படுவதைப் பல இடங்களில் காணலாம். திஸ்ஸ, பண்டார, சேனா என்பவை சாதாரணமாக சிங்களவரிடையே காணப்படும் பெயர்கள். இப்பெயர்களை மேலும் அலங்கரிக்க நாயக்கா என்று சேர்த்து புதிய பெயரை உருவாக்கி விடலாம். எடுத்துக்காட்டாக, கண்ணன் என்ற பெயரைக் கண்ணப்பன் என்றும், சிவன் என்பதை சிவலிங்கம் என்றும் மலர் என்பதை மலர்விழி என்றெல்லாம் பெரிதாக்கி வைக்கிறோமே அதே போல்.
நாயக்கா என்ற பெயர் சாதியோடு தொடர்புபடுவதால், அப்படியான பெயருள்ளவர்களையும் அவ்வாறே எண்ணுவது சரியல்ல.
பிள்ளை
இதேபோல இலங்கைத் தமிழரிடையே காணப்படும் வேலுப்பிள்ளை, ஐயம்பிள்ளை, கந்தப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை போன்ற பெயர்களை இந்தியாவில் இருக்கும் பிள்ளை என்ற சாதியுடன் தொடர்பு படுத்துவதும் பிழையே. இலங்கையில் எல்லாச் சாதியினரிலும் இத்தகைய பெயர்களை நாம் காணலாம். கந்தையர், சுப்பையர், பொன்னையா போன்ற பெயர்கள் கூட பலருக்கு உண்டு. இங்கே சாதியும் இல்லை குலமும் இல்லை. வெறும் பெயர்கள் மட்டுமே.
உண்மையில் பிள்ளை என்பது மகன் அல்லது மகள் என்பதற்கு ஒத்த சொல்லாக வழங்கப்படும் ஒரு சொல். அதனடிப்படையில் அலங்கரிக்கப்பட்ட பெயர்கள் அவை.
இதேபோல் நாயகம் அல்லது நாயகன் என்ற பொருளில் அமைந்த தமிழ்ப் பெயர்கள் சிங்களத்தில் வழங்கப்படும்போது, நாயகா என்று வரும். அதுவே பின்னர் நாயக்கா என்றாகியிருக்கலாம். சீதா என்பது இப்போதெல்லாம் சீத்தா என்று புழங்கப்படுவது போல்.
இப்படியாக இருக்கும்போது, இலங்கையிரின் பெயர்களுக்கும் சாதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்த முனைவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போலவே.
No comments:
Post a Comment