அண்மையில் வளர் என்ற சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை:
சொற்களைப் பிரித்து அல்லது சேர்த்து எழுதுதல்
தங்கப்பதக்கம்
தங்கப் பதக்கம்
தங்க பதக்கம்
மேலே இருப்பவற்றில் எது சரியான முறை என்பதில் ஐயப்பாடுகள் இருக்கின்றன. சரி, பிழை பார்க்குமுன், இந்த நிலை எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.
முற்காலத்தில் தமிழ் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்பதற்குச் சான்றாக எங்களிடம் இருப்பவை கல்வெட்டுகளும் பழைய ஓலைச் சுவடிகளும்.
இவைகளில் சொற்கள், வசனங்கள் என்பவை இடைவெளி உட்பட்ட எந்தவித நிறுத்தற் குறிகளும் இல்லாமல் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும்.
தனியாக இருக்கும் சொற்களைக்கூட பிரிக்காமல் எழுதியிருப்பது இடத்தை மிச்சப்படுத்துவதற்காக இருக்கலாம்.
உதாரணம்: “வண்டுவந்துதேன்குடித்தது”
சில வசனங்கள் சந்தி சேர்த்து எழுதப்பட்டிருக்கும்போது இப்படியான ஒரு வாசகமாக இருந்திருக்கலாம்.
“வண்டுகளுக்குத்தேன்கொடுக்கப்பூக்கள்பிறந்தனவோ”
இன்னுமொரு வசனத்தை இங்கே ஆய்வுக்காகத் தெரிவோம்.
"தெல்லிப்பளையென்றவூரிற்றோன்றியவொருவற்குப்பள்ளிக்கூடஞ்செல்வதென்றாற்பசியறியாரே"
இதை எடுத்த எடுப்பிலே வாசிப்பதென்பது பலருக்குக் கடினமாக இருக்கும். ஒரே மூச்சில் வாசிக்க எண்ணிச் சிரமப்பட வேண்டியிருக்கும்.
அதனால் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், சிலர் இத்தகைய வசனங்களில் இடைவெளியை அறிமுகப்படுத்தினார்கள். ஆறுமுகநாவலர் இதை ஆரம்பித்தார் என்றும் அறியப்படுகிறது. அப்படி எளிதாக்கினால் அந்த வசனம் இப்படித் தோன்றும்.
"தெல்லிப்பளை யென்ற வூரிற் றோன்றிய வொருவற்குப் பள்ளிக்கூடஞ் செல்வ தென்றாற் பசி யறியாரே"
இத்தகைய எழுத்து முறையை நாம் பழைய திருக்குறட் புத்தகங்களில் அல்லது வேறு பழைய புத்தகங்களில் கவனித்திருக்கலாம்.
பிரித்து எழுதுபரின் எண்ணத்தைப் பொறுத்து இந்த வசனக் கூறாக்கலில் கூடிய அளவோ அல்லது குறைந்த அளவோ சொற்களின் எண்ணிக்கை இருந்திருக்கும். உதாரணமாக, பள்ளிக்கூடம் என்பது பள்ளிக் கூடம் என்று எழுதப்பட்டிருக்கலாம்.
அத்துடன் இப்படிப் பிரிப்பது என்பது பிரித்துப் பார்க்க எண்ணுபவரின் தமிழறிவையும் பொறுத்தது. இங்கே இருக்கும் சொற்களை இனங்காண்பது இலகுவாக உள்ளதால், பிரிப்பதும் இலகுவாகி விடுகிறது.
ஒரு சங்க காலப் பாடலை எடுத்துச் சொற்களைப் பிரித்து எழுதுவது என்பது பலருக்கு முடியாத காரியமாக இருக்கும்.
உதாரணமாக:
கொலைவிற்புருவத்துக்கொழுங்கடைமழைக்கண்
இலவிதழ்புரையுமின்மொழிதுவர்வாய்
பிரிப்பது கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். காரணம், இந்தச் சொற்களிற் பல எங்கள் சொல்லறிவிற்குத் தூரமானவை. மேலே குறிப்பிட்ட உதாரணம் இப்பொழுது நாம் புழங்கும் சொற்களைக் கொண்டுள்ளதால் பிரிப்பதும் விளங்குவதும் இலகுவானதே. ஆகவே தமிழறிவின் ஆழம் இங்கே பங்குகொள்கிறது.
நாமறிந்த அண்மைய சொற்களான “அறிவில்லாதவன்” இரண்டு முறைகளில் பிரித்துப் பார்க்கப்படலாம்.
“அறிவில் ஆதவன்” மற்றது “அறிவு இல்லாதவன்”
இந்த நிலை, ஒரு விடயம் சொல்லப்படும் இடங்களையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து பல சொற்கள் வேறு வேறு கருத்துகளுக்காகப் பாவிக்கப்படும் என்பதைக் கூறுகிறது. அப்படியான சொற்களைப் பிரித்து எழுத நேர்ந்தால் கூடிய கவனம் தேவை.
ஒன்றாக எழுதப்பட்ட வாக்கியத்தில், இங்கே முதற் தடவையாக இடைவெளி என்ற நிறுத்தற் குறி ஒன்று தமிழுக்கு அறிமுகஞ் செய்யப்படுகிறது. நிறுத்தற் குறிகள் தமிழில் முன்னர் இருந்திருக்கவில்லை. ஆனால் பின்னாளில் அறிமுகமாகி, அந்த வழியில் வந்த முற்றுத்தரிப்பு, காற்புள்ளி, கேள்விக்குறி என்பவை உள்வாங்கப்பட்டு நல்ல உபயோகமாக உள்ளன.
இடைவெளியுடன் உள்ள தமிழ் வசனங்கள் வாசிப்பை இலகுவாக்க உதவுகின்றன. இருந்தும், சொற்களை விளங்கிக் கொள்வது கொஞ்சங் கடினந்தான். இங்கே உள்ள “றோன்றிய”, “வொருவற்குப்” என்ற சொற்களை எப்படி எடுத்து கொள்வது? தனிச்சொற்களாக அவற்றை அடையாளங் காண்பது சற்றுச் சிரமமே.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது தமிழின் தரம் கெடாமல் இலக்கணப் பிழையின்றி அவை தரப்படுகின்றன. இங்கே சந்தி பிரிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
இதை மேலும் இலகுவாக்க எண்ணி, நாம் இலக்கண உதவியை நாடி, சந்தி பிரிப்பின் மூலம் மேலும் பிரித்து எழுத முயல்வோம்.
அதாவது:
என்றவூரில் = என்ற + ஊரில்
ஊரிற்றோன்றிய = ஊரில் + தோன்றிய
போன்ற இலக்கணச் சூத்திரங்கள் மூலம் வசனத்தைக் கூறாக்கிச் சொற்களாகத் தனிமைப்படுத்திக் கொஞ்சங் கருத்து விளங்கக்கூடிய தொடராக எழுத முயல்கிறோம்.
இந்த நிலையில், அந்த வசனம் இவ்வாறு வரும்.
"தெல்லிப்பளை என்ற ஊரில் தோன்றிய ஒருவற்கு பள்ளிக்கூடம் செல்வது என்றால் பசி அறியாரே"
இலகுவாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு அது நெருடலாகவும், அழகற்றதாகவும், பிழையாகவும் (ந்) தெரியலாம்.
இந்தக் கட்டுரை எழுதுப்படும் போக்கைக் கவனித்தால் எழுதுபவரின் நிலை எதுவென்றும் விளங்கும். ஆனால் எனக்குத் தெரியாத இலக்கணச் சூத்திரங்களால், நான் தவறிழைத்து பல இலக்கணப் பிழைகளை வழுவமைதி காத்து எழுதியுள்ளேன். சில இடங்களில் வேண்டுமென்றே பிழையாக சந்தி பிரிப்பு அல்லது சேர்ப்பு செய்திருக்கிறேன்.
ஊரில் தோன்றிய என்பதை ஊரிற் தோன்றிய என்றும் சிலர் எழுதலாம்.
என்ற ஊரில் என்பதை என்றவூரில் என்றும் சிலர் எழுதலாம்.
எழுதுபவர்களின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்து சேர்த்தோ பிரித்தோ எழுதலாம்.
“றோன்றிய” என்ற சொல் அதன் முன்னால் இருந்த சொல்லின் தாக்கத்தால் “தோன்றிய” எனற உருவில் இருந்து அந்த உருவைப் பெற்றது.
இதேபோல், ஒரு சிறு உதாரணமாக, அழகு என்ற சொல் எப்படியெல்லாம் உருமாறுகிறது என்பதைப் பார்ப்போம்.
பல் லழகு, மூக் கழகு, இமை யழகு, கண் ணழகு, கழுத் தழகு,
முன் னழகு, தே ரழகு, பாட் டழகு, பூ வழகு, கூற் றழகு, பஞ் சழகு
எத்தனை அழகுகள் தமிழின் அழகில். கணினியில் “அழகு” என்ற சொல்லைத் தேடும்போது சிறப்புக் கவனம் எடுக்க வேண்டிய காரணங்களில் இதுவும் ஒன்று.
தங்கப்பதக்கம் என்ற சொல்லை, தங்கப் பதக்கம் என்று எழுதவது பரவாயில்லை. ஆனால் தங்க பதக்கம் என்னும் போது பொருட் பிழை நேரலாம். தங்குவதற்குப் பதக்கம் என்பது போல் பொருள் கொள்ளப்படலாம்.
இவ்வாறு சில சொற்களைப் பிரித்து எழுதும் போது பொருளில் பிழை நேராமல் இருக்கக் கவனம் எடுப்பது நல்லது.
வசனங்களைப் பிரித்து எழுதி இலகுவாக்கும்போது, ஊர்ப் பெயர்களைப் பிரிப்பதைத் தவிர்க்கலாம். உதாரணமாக:
பருத்தித்துறை என்பதை பருத்தித் துறை என்றோ பருத்தி துறை என்றோ எழுதவதை தவிர்க்கலாம்.
சில முக்கிய பெயரீடு, தலைப்புகள் என்பவற்றில் கொஞ்சம் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
அண்மையில் தமிழ் நாட்டில் தோன்றிய ஒரு அரசியற் கட்சியின் பெயரை "தமிழக வெற்றி கழகம்" என அறிவித்தார்கள். இதைப் பார்த்துப் பலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அக் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம்" எனத் திருத்தப்பட்டுள்ளது.
மேலும் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
அச்சந் தவிர் ====== அச்சம் தவிர்
இளமையிற் கல் ======
இளமையில் கல்
கடலோரம் ======
கடல் ஓரம்
விருந்துண்ண ====== விருந்து உண்ண
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
======
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
இவ்வாறு பல எடுத்துக்காட்டுகளை நாம் நடைமுறையிற் பார்க்கலாம்.
சில வேளைகளில் தவிர்க்கமுடியாத அளவில் சில சொற்கள் நீளமாக இருக்கும். அவை பிரித்து எழுதப்பட முடியாதவையாக இருக்கும் வேளைகளில், சில நேரங்களில் சில சிக்கல்கள் எழும்.
உதாரணமாக “எடுத்துக்காட்டுகளை” என்ற சொல்லைப் பார்ப்போம்.
இது, ஒரு வரியின் இறுதியில் வரும்போது, அந்தச் சொல்லை அடுத்த வரியில் எழுத வேண்டியேற்படும். அப்போது வரியின் அழகு குறைந்து தோன்றும். அத்தகைய நேரங்களில், நாம் இணைப்புக்கோடு என்ற நிறத்தற் குறியைப் பாவித்து, அதைச் சரியாக்கலாம்.
எடுத்துக்கா-
-ட்டுகளை …….
பிரித்து எழுதும் முயற்சிகளிலே பிரச்சினைகளை எதிர்நோக்கும் நேரத்தில்,
மேலதிக புதிய பிரச்சினை ஒன்றும் உள்ளது. அதாவது, புணர்ச்சி தேவைப்படாத இடங்களில் வலிந்து புணர்ச்சியை ஏற்படுத்திச் சொற்களைச் சேர்த்து எழுதுவது அண்மையில் காணப்படும் ஒரு கெட்ட (ப்) பழக்கம்.
“முக்கியச் செய்திகள்” என்று பல தொலைக்காட்சி, இணைய வழியான செய்தி ஊடகங்களிற் பார்க்கிறோம். இது இடையில் வந்த ஒரு புதுமை. முன்னர் “முக்கிய செய்திகள்” என்று தான் எழுதி வந்தோம்.
சிவகுமார் என்று எழுதி வந்ததை சிவக்குமார் என்று எழுதுகிறார்கள்.
சீதா என்பதை சீத்தா என்று எழுதுவது.
இவற்றின் தவறுகளையோ அல்லது சரியான பிரயோகங்களையோ எப்படிக் கண்டுபிடிப்பது? தமிழை நாளாந்தம் புழங்கி வருபவர்களுக்கு இத்தகைய பிரயோகம் நெருடலாகத் தோன்றும். அப்போது இதன் சரி பிழைகளைக் கண்டறியலாம்.
வேறு சில சந்தர்ப்பங்களில், கடைப்பிடி என்பதை கடைபிடி என்றும், கட்டிப்பிடி என்பதை கட்டிபிடி என்றும் எழுதும்போது பொருட்பிழை நேரிடும்.
கேள்விப்பட்டு என்பதை கேள்விபட்டு என்பதும் சரியல்ல.
இறுதியில், எது சரி எது பிழை என்பதை மக்களின் தமிழ் அறிவின் ஆழத்தைப் பொறுத்து அவர்கள் பிழை சரி சொல்ல முடியும். இருந்தும், நாங்கள் எல்லோரும் எங்கள் பொறுப்புகளை உணர்ந்து ஓரளவுக்கேனும் கருத்துப் பிழை தோன்றாது, புணர்ச்சி விதிகளைச் சிதைக்காது தமிழை எழுதி வருதல் மிக முக்கியமாகும்.
தமிழிற்கு ஏராளமான புணர்ச்சி விதிகள் உள்ளன. அத்தனையையும் அறிந்திருப்பதும் அவற்றை ஞாபகம் வைத்திருப்பதும் இலகுவான விடயம் இல்லை. அதனால் நூறு வீதம் சரியாக எழுதுவதோ பேசுவதோ கடினமான காரியம் தான்.
சில சந்தர்ப்பங்களில் தமிழின் நெளிவு சுளிவுகள் மேலதிக பங்களிப்பையும் செய்கின்ற உதாரணங்கள் காணப்படுகின்றன. முன்னரே குறிப்பிட்ட அறிவில்லாதவன் போன்றவை அவை.
பிள்ளையாருக்குக்கல்யாணம்
இது
பிள்ளை! யாருக்குக் கல்யாணம்?
என்றும்
பிள்ளையாருக்குக் கல்யாணம் என்றும் விளங்கப்படலாம்.
இப்படியாக பல தமிழ் விளையாட்டுகளும் காணப்படுகின்றன.
முடிவாக, தமிழில் சொற்களைச் சேர்த்தோ அன்றிப் பிரித்தோ புழங்கும்போது ஏற்படும் தவறுகளையும் இழுக்குகளையும் நாம் தவிர்க்க வேண்டும். இவற்றைச் சிறுவயதில் தமிழைக் கற்க ஆரம்பிக்கும்போதே, கவனமுடன் படித்து விளங்கி வைத்திருத்தல் நல்லது.
இதுவும் சரி
இதுவுஞ் சரி
இதுவுஞ்சரி
என்பவற்றில் எது சரியென்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் ஒருவர் எடுத்துக் கொள்வார் என்பதைப் பற்றிய சரியான புரிதல் மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நூற்றுக்கு நூறு எதிர்பார்ப்பவர் எண்பது எடுக்கும் நிலை நேரிடும்.
சித்திரமும் (ங்) கைப்பழக்கம்
செந்தமிழும் (ந்) நாப்பழக்கம்
தமிழைச் செவ்வனே புழங்கினால்
தவறுகள் தவிர்க்கப்படலாம்.