Wednesday, November 19, 2008

இசை - மொழி – தமிழ் :: பகுதி 6 (கடைசி) – தமிழிலிசை


பக்தியைப் பயன் படுத்தி அல்லது பக்தியால் பயப்படுத்திப் புகுத்தி விட்ட சங்கீதத்தில் இன்னொன்றையும் சேர்த்துக் குழப்பியிருந்தார்கள் ஆதியில் தமிழைத் தள்ளி வைத்த விற்பன்னர்கள். தமிழ் மொழியில் இருக்கும் கடின ஒலிகளும், தமிழ் மொழியில் கிடைக்காத சில ஒலிகளும் தமிழில் இசையை இனிமையாக இசைக்க முடியாமல் செய்யும் பெருந் தடைக் கற்கள் என்ற நச்சுக் கருத்தையும் பரப்பி மக்களை நம்ப வைத்து வந்தனர். இந்தப் பரப்புரை இன்றும் தொடர்வதை நாங்கள் கண் கூடாகக் காண்கிறோம். இந்த அப்பட்டமான பிழையான வாதத்தை இன்னமும் எம் மக்கள் செவி மடுக்கிறார்கள் என்பது ஒரு வேதனையான உண்மை. இந்த அபத்தத்திற்காக, இனிமையும் மொழியும் பற்றிய விளக்கம் முதலில் இனிமை என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டு விட்டது.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீதத்தை வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறமிருக்க நாடகங்கள் மூலமும் கிராமிய இசை மூலமும் தமிழரிசை மறு புறத்தில் தானாகவே வளர்ந்து கொண்டிருந்தது. நாடகங்கள் பாட்டுகளால் பாடி நடிக்கப் பட்டுக்கொண்டிருந்த நாள் முதலாகத் தமிழரிசையும் தமிழ் நாடகங்களுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது. பின்னர் இது திரைப்படத் துறைக்குட் புகுந்து திரையிசையாக மிளிர்ந்த போது தமிழின் இனிமை தனித்துத் தெரிந்தது. ஆக திரைப் படப் பாடல்களால் தமிழரிசை இப்பொழுது தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பது எமக்குப் பெருமையே.

சோழராட்சிக்குப் பிறகு அதிகாரம் மிக்க அரசாக தமிழரசுகள் இன்று வரை தலை நிமிர்த்தவில்லை. சிற்றரசுகள் ஆங்காங்கே இருந்தாலும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதாக ஒன்றும் இருக்கவில்லை. அதனால் அதிகாரத்தினாற் கூடத் தமிழைத் தமிழரின் இசையில் முதன்மைப்படுத்த முடியவில்லை. இருந்தும் பாபநாசம் சிவன் போன்ற இசை அறிஞர்களின் முயற்சியால் தமிழ்ப் பாடல்கள் தோன்றினாலும் அப் பாடல்களுக்கு முறையான மரியாதை தமிழ்ப் பாடல் என்ற காரனத்தால் மறுக்கப் பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது.

அண்மைக் காலங்களாக அவ்வப்போது தோன்றும் புரட்சிகரச் சிந்தனையாளர்களினாலும் மொழிப் பற்றுள்ளவர்களின் அயராத முயற்சியிகளாலும் ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்கள் இப்பொழுது மேடைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இருந்தும் நமது தாய் மொழியில் பாடுவதும் பயில்வதுமே நமக்கு அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழ் இசைக் கலைஞர்கள் முழுமூச்சாக முயன்றால் இசைத் தமிழை மெருகூட்டி வளர்த்து நம் எதிர்காலச் சந்ததிக்கு அளிக்க முடியும். தமிழர் மத்தியில் இருக்கும் எண்ணற்ற இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் இதை உணர்வு பூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுத்த வேண்டும்.

தமிழர்கள் எப்பொழுதும் ஒரு மதசார்பற்ற நிலையிலிருந்து வழுவாமல் தங்கள் கலையை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே தமிழில் இசையைச் செப்பனிடும் பணியில் பாடலியற்றுவோர்கள் மத சார்பற்ற பாடல்களை இயற்ற வேண்டும். முன்னர் தோன்றிய தமிழ்ப் பாடல்கள் கூட மத சார்பான பாடல்களாக இருப்பது தமிழிலிசை வளர்ச்சிக்குத் துணை செய்வதாக இல்லை. மதத்தைத் தவிர்த்து ஏனைய விடயங்களை மையமாக வைத்துக் கொண்டு பாடல்களை ஆக்கித் தமிழில் பாடல்களை நிறைய உருவாக்க வேண்டும். பல மதத்தைச் சேர்ந்த எல்லாத் தமிழர்களும் இசையைத் தமிழில் முழு மனதோடு பயில நம் புதுத் தமிழிசை உகந்ததாக இருக்க வேண்டும்.

ஆனாலும் இசையை முறையாகக் கற்கத் தொடங்குவோருக்கு இசைச் சுர வரிசைகளில் வைத்துப் பாடுவதற்கு தமிழ்ப் பாடல்களையே தமிழர் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்கும் போது அது முழுக்க முழுக்கத் தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். பயிலுவோர் பழகும் பாட்டுகளின் பொருளுணர்ந்து கற்க வேண்டும்.

அண்மைக் காலங்களில் பல இசைக் கலைஞர்கள் தமிழில் ஏராளமான பாடல்களைப் பாடி வருகிறார்கள்.இதனால் எமது பாரம்பரிய இசை வடிவங்களில் தமிழ்ப் பாடல்களைப் பாடக் கூடிய நிலையொன்று வந்து கொண்டிருக்கின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் தாய் மொழியில் அப் பிள்ளைகள் முழுக்க முழுக்கக் கற்பதற்கு உதவி செய்ய வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருப்பது போல, தமிழர் மத்தியில் இன்றைய நாளில் இருக்கும் எண்ணிலடங்காத் தமிழ்க் கலைஞர்கள் இதற்காகத் தங்கள் திறமையைப் உபயோகித்துத் தமிழர் தமிழில் இசை கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இசையால் வசமாகா இதயமெது?
தமிழிசையால் வசமாகா இதயமெது, எது, எது?

வாழ்க தமிழரிசை.


இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகிறது. உங்கள் கருத்துகளைப் பதிவு செய்வீர்களானால் இக் கட்டுரையில் இருக்கும் தவறுகளைத் திருத்த உதவியாக இருக்கும்.

நன்றி, வணக்கம்.

ஜெயபால்

No comments: