Sunday, November 30, 2008

குறையொன்றுமில்லை - ஒளி நாடா ஏ.வி. ரமணன்

யுரேக்கா, யுரேக்கா, யுரெக்கா.
கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன்.

சப்த சுவரங்கள் நிகழ்ச்சியில் திரு. ஏ. வி. ரமணன் மூலம் அறிமுகமான குறையொன்றும் இல்லை மறை மூர்த்திக கண்ணா என்ற பாடலைப் பற்றிய அனுபவத்தைப் பற்றி இங்கே முன்னர் எழுதியிருந்தேன். அந்த ஒளி நாடாவைக் கண்டு பிடித்து அதை இங்கே வலையேற்றுகிறேன். கண்டு களியுங்கள்.





யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

Wednesday, November 19, 2008

இசை - மொழி – தமிழ் :: பகுதி 6 (கடைசி) – தமிழிலிசை


பக்தியைப் பயன் படுத்தி அல்லது பக்தியால் பயப்படுத்திப் புகுத்தி விட்ட சங்கீதத்தில் இன்னொன்றையும் சேர்த்துக் குழப்பியிருந்தார்கள் ஆதியில் தமிழைத் தள்ளி வைத்த விற்பன்னர்கள். தமிழ் மொழியில் இருக்கும் கடின ஒலிகளும், தமிழ் மொழியில் கிடைக்காத சில ஒலிகளும் தமிழில் இசையை இனிமையாக இசைக்க முடியாமல் செய்யும் பெருந் தடைக் கற்கள் என்ற நச்சுக் கருத்தையும் பரப்பி மக்களை நம்ப வைத்து வந்தனர். இந்தப் பரப்புரை இன்றும் தொடர்வதை நாங்கள் கண் கூடாகக் காண்கிறோம். இந்த அப்பட்டமான பிழையான வாதத்தை இன்னமும் எம் மக்கள் செவி மடுக்கிறார்கள் என்பது ஒரு வேதனையான உண்மை. இந்த அபத்தத்திற்காக, இனிமையும் மொழியும் பற்றிய விளக்கம் முதலில் இனிமை என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டு விட்டது.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீதத்தை வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறமிருக்க நாடகங்கள் மூலமும் கிராமிய இசை மூலமும் தமிழரிசை மறு புறத்தில் தானாகவே வளர்ந்து கொண்டிருந்தது. நாடகங்கள் பாட்டுகளால் பாடி நடிக்கப் பட்டுக்கொண்டிருந்த நாள் முதலாகத் தமிழரிசையும் தமிழ் நாடகங்களுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது. பின்னர் இது திரைப்படத் துறைக்குட் புகுந்து திரையிசையாக மிளிர்ந்த போது தமிழின் இனிமை தனித்துத் தெரிந்தது. ஆக திரைப் படப் பாடல்களால் தமிழரிசை இப்பொழுது தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பது எமக்குப் பெருமையே.

சோழராட்சிக்குப் பிறகு அதிகாரம் மிக்க அரசாக தமிழரசுகள் இன்று வரை தலை நிமிர்த்தவில்லை. சிற்றரசுகள் ஆங்காங்கே இருந்தாலும் பெரிதாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதாக ஒன்றும் இருக்கவில்லை. அதனால் அதிகாரத்தினாற் கூடத் தமிழைத் தமிழரின் இசையில் முதன்மைப்படுத்த முடியவில்லை. இருந்தும் பாபநாசம் சிவன் போன்ற இசை அறிஞர்களின் முயற்சியால் தமிழ்ப் பாடல்கள் தோன்றினாலும் அப் பாடல்களுக்கு முறையான மரியாதை தமிழ்ப் பாடல் என்ற காரனத்தால் மறுக்கப் பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது.

அண்மைக் காலங்களாக அவ்வப்போது தோன்றும் புரட்சிகரச் சிந்தனையாளர்களினாலும் மொழிப் பற்றுள்ளவர்களின் அயராத முயற்சியிகளாலும் ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல்கள் இப்பொழுது மேடைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இருந்தும் நமது தாய் மொழியில் பாடுவதும் பயில்வதுமே நமக்கு அவசியம் என்ற நோக்கத்துடன் தமிழ் இசைக் கலைஞர்கள் முழுமூச்சாக முயன்றால் இசைத் தமிழை மெருகூட்டி வளர்த்து நம் எதிர்காலச் சந்ததிக்கு அளிக்க முடியும். தமிழர் மத்தியில் இருக்கும் எண்ணற்ற இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் இதை உணர்வு பூர்வமாகச் சிந்தித்துச் செயற்படுத்த வேண்டும்.

தமிழர்கள் எப்பொழுதும் ஒரு மதசார்பற்ற நிலையிலிருந்து வழுவாமல் தங்கள் கலையை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே தமிழில் இசையைச் செப்பனிடும் பணியில் பாடலியற்றுவோர்கள் மத சார்பற்ற பாடல்களை இயற்ற வேண்டும். முன்னர் தோன்றிய தமிழ்ப் பாடல்கள் கூட மத சார்பான பாடல்களாக இருப்பது தமிழிலிசை வளர்ச்சிக்குத் துணை செய்வதாக இல்லை. மதத்தைத் தவிர்த்து ஏனைய விடயங்களை மையமாக வைத்துக் கொண்டு பாடல்களை ஆக்கித் தமிழில் பாடல்களை நிறைய உருவாக்க வேண்டும். பல மதத்தைச் சேர்ந்த எல்லாத் தமிழர்களும் இசையைத் தமிழில் முழு மனதோடு பயில நம் புதுத் தமிழிசை உகந்ததாக இருக்க வேண்டும்.

ஆனாலும் இசையை முறையாகக் கற்கத் தொடங்குவோருக்கு இசைச் சுர வரிசைகளில் வைத்துப் பாடுவதற்கு தமிழ்ப் பாடல்களையே தமிழர் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்கும் போது அது முழுக்க முழுக்கத் தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். பயிலுவோர் பழகும் பாட்டுகளின் பொருளுணர்ந்து கற்க வேண்டும்.

அண்மைக் காலங்களில் பல இசைக் கலைஞர்கள் தமிழில் ஏராளமான பாடல்களைப் பாடி வருகிறார்கள்.இதனால் எமது பாரம்பரிய இசை வடிவங்களில் தமிழ்ப் பாடல்களைப் பாடக் கூடிய நிலையொன்று வந்து கொண்டிருக்கின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பிள்ளைகளின் தாய் மொழியில் அப் பிள்ளைகள் முழுக்க முழுக்கக் கற்பதற்கு உதவி செய்ய வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருப்பது போல, தமிழர் மத்தியில் இன்றைய நாளில் இருக்கும் எண்ணிலடங்காத் தமிழ்க் கலைஞர்கள் இதற்காகத் தங்கள் திறமையைப் உபயோகித்துத் தமிழர் தமிழில் இசை கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இசையால் வசமாகா இதயமெது?
தமிழிசையால் வசமாகா இதயமெது, எது, எது?

வாழ்க தமிழரிசை.


இத்துடன் இத்தொடர் முடிவுக்கு வருகிறது. உங்கள் கருத்துகளைப் பதிவு செய்வீர்களானால் இக் கட்டுரையில் இருக்கும் தவறுகளைத் திருத்த உதவியாக இருக்கும்.

நன்றி, வணக்கம்.

ஜெயபால்

Monday, November 17, 2008

இசை - மொழி – தமிழ் :: பகுதி 5 – கர்னாடக இசை


தமிழ் மண்ணைப் பொறுத்த வரை, இந்தச் சுழற்சிகளின் இறுதிக் கட்டமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழராட்சி முடிவுக்கு வந்த பின் தமிழ் நாடுகளின் ஆட்சிகள் பெரும் பாலும் அன்னிய மொழி மன்னர்களின் கைகளிலேயே இருந்து வந்தன. சோழராட்சிக்குப் பிறகு வட இந்தியரும், இசுலாமியரும், தெலுங்கு மற்றும் கன்னட மன்னர்களும் தமிழ் நாட்டைப் பல ஆண்டுகளாக ஆண்டு வந்தனர். இந்தக் காலத்தில் தமிழ் நாட்டின் இசையிலிருந்து தமிழ் மிகவும் பலமாகத் தள்ளப்பட்டு வடமொழியும் தெலுங்கும் இசையின் அடிப்படை என்ற நிலைக்கு வந்து கர்னாடக சங்கீதம் என்ற பெயரில் தென்னிந்தியர்களுக்கான பொதுவான இசையாக நிலை பெற்று விட்டது. தெலுங்குக் கீர்த்தனைகளின் தந்தையென்று விழங்கும் தியாகராச சுவாமிகளும் தெலுங்கு மன்னராட்சியின் போதே தமிழகத்திலிருந்து கொண்டே அந்தக் கீர்த்தனைகளை உருவாக்கி கர்நாடக இசையில் தெலுங்குக்கு ஒரு மிக முக்கிய, நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்தார்.


இப்படியாகத் தமிழர் இசையிலிருந்து தமிழ் கழற்றி விடப்பட்டுத் தமிழ்ப் பாடல்களில்லாத கர்நாடக இசையென்ற ஒரு இசையைத் தென்னிந்தியர் அனைவருக்கும் பொதுவான இசை என்ற ஒரு நிலைப்பாட்டைத் தமிழரல்லாத மன்னர்கள் தமிழரிடம் திணித்து விட்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் இசை ஆர்வமுள்ள தமிழரும் கர்நாடக சங்கீதத்தைப் பயின்று பாண்டித்தியமும் பெற்று அதையே மற்றவர்களுக்கும் கற்பித்துக் கர்நாடக சங்கீதத்தை தமிழரின் சங்கீதமாகத் தொடரச் செய்யப் பெரும் பங்கு செலுத்தினார்கள். தவிரவும், இந்த இசைப் பாடல்கள் முழுக்க முழுக்க மத வழிபாட்டுப் பாடல்களாக இருந்த காரணத்தால் அப் பாடல்களுக்கு ஒரு உயர்ந்த புனிதமான இடமும் இலகுவாகக் கிடைத்தது. இந்தப் புனிதப் பட்டமும் சங்கீதம் பயின்ற எல்லோருக்கும் ஊட்டப்பட்டு வந்தமையால் இப்பாடல்களை எதிர்க்கவோ அன்றித் தவிர்த்து மத சார்பற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடவோ அல்லது பயிலவோ யாருக்கும் துணிவு வரவில்லை. பக்தி என்ற பலவீனத்தால் கட்டுண்டு கிடந்த வெகுளிப் பாமர மக்கள் தமிழில் பாடுவதைக் கடவுளுக்கு எதிரான செய்கையென்று எண்ணி அதைப்பற்றிச் சிந்திக்கவே மாட்டார்களே. நாளும் பொழுதும் நாவிலும் காதிலும் விழும் கர்நாடக சங்கீதம் இசை வல்லுனர்களையும் அவர்களைச் சூழ இருந்த இசை இரசிகர்களையும் வசப்படுத்துவது தொடர்ந்து கொண்டே வந்தது.

கச்சேரி தொடரும் ...

Sunday, November 09, 2008

இசை - மொழி – தமிழ் :: பகுதி 4 – பிற மொழி ஊடுருவல்


இப்பொழுது, தென்னிந்திய இசையாகப் பலர் படிப்பதும் பயிற்சி எடுத்துக் கொள்வதுமான கர்நாடக இசையைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்தக் கர்நாடக இசையில் வடமொழியிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட பாட்டுகள்
மட்டுமே முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்திய மற்ற மொழிகளை விட தெலுங்கும் வடமொழியும் முதன்மைப் படுத்தப் பட்டிருக்கும் காரணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

இந்திய வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்த வரலாற்றில் வட மொழியின் தாக்கமும் ஆதிக்கமும் வேதங்கள், புராணங்களூடாக வலுப்பெற்றிருப்பதைக் காண முடிந்திருக்கும். வடமொழி மக்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பரந்து வாழ நேர்ந்த காலங்களில், வட மொழியின் தாக்கமும் விரிந்து பரவத் தொடங்கியது. பரந்து கிடந்த பிராந்திய மொழிகளிலும் அம் மொழியினரின் இசை வடிவிலும் வட மொழி கொஞ்சங் கொஞ்சமாகக் கலக்கத் தொடங்கியது. அந்தக் காலத்தின் குருகுலக் கல்வி முறை, வடமொழிப் பாவனையை ஆதரித்துக் காத்த மன்னராட்சி முறை என்பன வடமொழியின் தாக்கம் தடையின்றிப் புகுந்து விளையாட உதவியாக இருந்தன. உள்ளூர் மக்களின் அறியாமையாலும், மன்னர்களின் பொறுப்பற்ற சில செயற்பாடுகளாலும் கலை, கல்வி போன்றவற்றில் முன்னிலையைத் தக்க வைத்த வடமொழியாளர்கள் தம் மொழியின் ஆதிக்கத்தை உறுதியாகவும் வேகமாகவும் உள்ளூரில் வளர்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் தம் மொழியின் இருப்பை விரும்பி உள்ளூர் மொழி வளர்ச்சியையும் அதிலிருந்த கலை வடிவங்களையும் தலையெடுக்காமலும் பார்த்துக் கொண்டார்கள். இந்தக் கைங்கரியத்தில் அவர்களுக்குப் பெரிய உதவியாக விளங்கியது அக்கால மக்களின் மதம் பற்றிய நம்பிக்கைகள். இந்த மத நம்பிக்கையையே அடி நாதமாகக் கொண்டது வட மொழியும் அதன் பாடல்களும். இதனால், வடமொழியும் அது சார்ந்த இசைவடிவும் மிக இலகுவில் மதப் பலவீனர்களாக இருந்த பாமரப் பிராந்திய மக்களிடையே திணிக்கப் படக்கூடியனவாக இருந்தன.

மன்னராட்சி நடந்து கொண்டிருந்த கால கட்டங்களில், எல்லா நாடுகளுமே அடிக்கடி வேறு வேறு நாட்டு மன்னர்களின் ஆட்சியின் கீழ் வருவதும் மாறுவதுமாக இருந்தன. இப்படியாக மாறி வரும் மன்னர்கள் தத்தம் மொழியின் பால் ஆதரவாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறாக ஒரு மொழியின் மேல் இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவது இயல்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இவற்றில் அகப்படாமல் எம்மொழி வந்தாலும் அதற்கெல்லாம் ஈடு கொடுத்து மன்னர்களினதும் மக்களினதும் மத நம்பிக்கையை ஊடகமாக வைத்து வட மொழி தொடர்ந்து ஊடுருவிக் கொண்டேயிருந்தது. இதனாற் சொந்த மொழியில் இசை வளர்ச்சி என்பது சிதைந்து கொண்டே போனது. அவ்வப் பொழுது அந்தந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் நாட்டின் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காலங்களில் சொந்த மொழியில் இசையின் வளர்ச்சிக்குப் பங்காற்றினாலும் ஒரு முழு வளர்ச்சி என்பது எட்டப்பட முடியாமலேயே இருந்தது.

இந்த ஆட்சிச் சுழலிற் சிக்கியிருந்த தமிழ் அரசுகள் வீழ்வதும் எழுவதுமாக இருந்து வந்தன. எழுந்திருந்த காலங்களில் மதத்தையே ஊடகமாக வைத்துச் சைவத் திருமுறைகளும் வைணவ ஆழ்வார் பாடல்களும் வேறு பல ஆக்கங்களும் தமிழில் இசையோடு அறிமுகமாயின. ஆனாலும் தமிழரசுகள் வீழ்ந்த நேரத்தில் சைவத் திருமுறைகள் அமுக்கப் பட்டதும் பின்னர் ஒரு தடவை அவை குற்றுயிருங் குறையுயிருமாக வெளிக் கொணரப் பட்டதும் நாமெல்லாம் அறிந்ததே.


கச்சேரி தொடரும் ...

Saturday, November 08, 2008

இசை-மொழி–தமிழ் :: பகுதி 3 - இனிமை


இசைக்கும், மொழிக்கும் முடிச்சுப் போடுவது பொருந்தாதென்று சில கருத்துகளும், இசையின் இனிமை மொழிகளில் தங்கியுள்ளது என்பது போன்ற சில கருத்துகளும் இங்கே நிலவுகின்றன. இசையின் இனிமையத் தீர்மானிப்பது இசையக் கேட்போரே. கேட்பவரின் முடிவைத் தீர்மானிப்பது அவர் இது நாள் வரை பழகிய இசை வகையறாக்கள். அவரது இசைப் பரிச்சியம் சாதாரணமாக அவரது தாயின் தாலாட்டில் தாய் மொழியில் தொடங்குகிறது. ஆக, இசைப் பரிச்சியம் தாய் மொழியில் தொடங்குவதையும் அதையே ஒருவர் முதலில் பழக்கப் படுத்தியிருப்பதையும் நாம் இங்கு காண்கிறோம். இதுவே இசை நுகர்வோரின் முடிவைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்கும். தனக்குப் பழக்கமான மொழியில் உரையாடும் போது கிடைக்கும் வசதி பழக்கமல்லாத மொழியில் உரையாடும் நேரங்களில் கிடைப்பதில்லை என்பது எங்களில் பலருக்குப் புரிந்த உண்மை. சொந்த மொழியின் இலகு நடையும் இனிமையும் வசதியும் வந்த மொழியில் கிடைக்க முடியாத ஒன்று. இதுவே சொந்த மொழிப் பாடல்களை நுகர்வதிலும் எற்படும் உணர்வாகும்.

ஒருவரது தாய் மொழியல்லாத மொழியில் இருக்கும் எப்பேர்ப்பட்ட இனிமையான பாட்டும் அவரது தாய் மொழியில் இருக்கும் ஒரு சாதாரணப் பாட்டை விட அவருக்கு இனிமையாக இருக்க முடியாது. ஏனென்றால் அந்தப் பிற மொழிப் பாடலில் அவருள்ளே புகுந்து கொள்வது அப் பாடலின் இனிமையின் ஒரு பகுதியான இசை மட்டுமே. அப் பாடலின் மொழியில் கலந்திருக்கும் கவிச் சுவை அவரைச் சென்றடைவதில்லை. அதனால் அப் பாடலின் முழு இனிமையும் அவருக்குக் கிடைக்காது என்பது வெளிப்படையே.

அந்தப் பாடலின் இசையின் இனிமை அவரைச் சேர்வதற்குக் கூட ஒரு காரணம் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்திய உப கண்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்திய மொழிகளின் அனேகமான எல்லாப் பாடல்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஓசை அடிப்படையிலிருந்து இசைக்கின்றன. ஆகவே, எந்த ஒரு இந்தியப் பாடலின் இசை வடிவமும் எந்த ஒரு இந்தியருக்கும் கேட்கக் கூடியதாக இருப்பது இயற்கையே. இந்த அடிப்படை இசை இந்தியப் பாடல்களிலும், மத்திய கிழக்குப் பகுதிப் பாடல்களிலும் இருப்பதை நாம் காணலாம். அதனால் மத்திய கிழக்குப் பகுதி மக்களின் இசை கூட நமக்குள் தாக்கம் ஏற்படுத்துவது இலகுவே. இதன் அனுபவம் பலருக்கு ஏற்படடிருக்கலாம். ஒரு அன்னிய நாட்டில் தனித்து வசித்த பலர், அரேபிய மொழிப் பாடல்களைக் கேட்கக் கிடைத்திருந்தால் அது ஒரு தனி அனுபவம். இதுவே ஒரு சீன மொழிப் பாடலாக இருந்திருந்தால் அதனால் ஒரு தாக்கத்தை எற்படுத்தியிருக்க முடியாது. இன்னும் அரேபியா - இந்தியா என்பவற்றின் தொடர்பு, வரலாறு சார்ந்த ஒரு துறை. அதை விட்டு விட்டு நம் இசைப் பார்வைக்குத் திரும்புவோம்.

இசை - மொழி – தமிழ் :: பகுதி 2 - மொழி

மனிதனின் கூர்ப்பின் ஒரு கட்டத்தில், அவன் மொழியொன்றைப் பேசத் தொடங்கிய போது, அந்த மொழியின் சொற்களை இசையிற் போட்டு மனித உணர்ச்சிகள் வெளிப்பட்ட போது இசைக்கு ஒரு புது வடிவம் கிடைத்திருந்திருக்கிறது. இசைக் கருவிகளிலிருந்து ஒலிக்கும் இசையாக வெளிப்படும் மனித உணர்ச்சிகள் சொற்களைக் கொண்டு ஒலிக்கும் போது பாடல்கள் இசைக்கத் தொடங்கின. இசைக்காக மொழியில் உருவான பாடல்களும், பாடல்களுக்காக உருவாகும் இசை வடிவங்களும் ஒன்றையொன்று வளர்க்கத் தொடங்கின.

சொற்களும் சொற்றொடர்களும் இசையோடு ஒலிக்க வேண்டுமானால், சொற்றொடர்கள் ஒரு ஒழுங்கில் கோர்க்கப்பட வேண்டுமென்ற கட்டாயம், பாட்டு உருவாக்கத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற அடுத்த கட்ட நிலைக்கு மொழியை எடுத்துச் சென்றது. ஓசை நயம் குன்றாமல் பாடுவதற்கு ஒலி நயத்தோடு கூடிய பாட்டுகள் உருவாகி அவை இசையை மெருகூட்டிய அதே நேரத்தில் மொழியின் வளர்ச்சியில் பாட்டு இயற்றும் துறை உருவாக அவை காரணியாக இருந்தன.

மனிதன் இசைத்தான். அதில் மொழியை இழைத்தான். இசையில் இழைக்கப்பட்ட மொழிக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்து அதன் வளர்ச்சிக்கு அது துணை புரிந்தது. ஒலியாய்த் தொடங்கிய இசை பாட்டாகிப் பல்கிப் பெருகியது.

மனித வளர்ச்சி பல்லாயிரம் வருடங்களூடாகப் பயணிக்கும் போது, மனிதன் பூகோள ரீதியாகப் பிரிந்து பரவத் தொடங்கினான். பிரிந்து பரவிய மனிதன் தான் சென்ற திசைகளில் தன் மொழியையும் திரித்து வழங்கிக் கால ஓட்டத்தில், வெவ்வேறான மொழிகளின் தோற்றத்திற்கும் வித்திட்டான். ஆனால் எல்லா மொழிகளிலும், மனிதனின் இசை வளர்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது.

கச்சேரி தொடரும் ...

இசை - மொழி - தமிழ் :: பகுதி 1 - இசை

இசையால் வசமாகா இதயமெது? இருக்க முடியாதே.

இசை பற்றிச் சிந்திக்கும் போது அதன் தோற்றமும் வளர்ச்சியும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

மனித இனம் சிந்திக்கத் தொடங்கிய பொழுது அவனோடு இருந்த பறவைகளும் மிருகங்களும் இசையின் தோற்றத்திற்கு உதவியிருக்க வேண்டும். தற்போதிருக்கும் கிளி, மைனா, குயில் போன்ற பறவைகள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கலாம். இப் பறவைகள் எழுப்பும் இனிய ஒலியே மனித இசையின் முதல் உந்து சக்தியாக இருந்திருக்கலாம். கிளியின் இனிய கீக்கீச் சத்தமும், குயிலின் இனிய கூக்கூச் சத்தமும், மைனா போன்ற பறவைகளின் இனிய ஒலிகளும் இசைக்குரிய வித்தாக மனித சிந்தனையில் உருவாகியிருக்க வேண்டும். பறவைகளின் ஒலி காதுக்கு இனிமையாகவும் சிந்தைக்கு இதமாகவும் இருப்பதை மனிதன் உணர்ந்த போது, தானும் அது போன்ற ஒலிகளை எழுப்பி மனித இசையைத் தொடக்கி வைத்திருக்க வேண்டும்.

ஓய்வு நேரங்களில் மனிதன் இவ்வகை ஓசைகளை எழுப்பி அதை மெருகூட்டி இசையை வளர்க்கத் தொடக்கியிருக்க வேண்டும். பறவைகளின் சத்தங்கள் இசையாக ஒலித்த போது அதில் செய்திப் பரிமாற்றமும் உணர்ச்சி வெளிப்பாடும் இருந்ததை மனிதன் கவனிக்கத் தவறியிருக்க மாட்டான். மனிதனின் வெவ்வேறு உணர்ச்சிகளும் அவனது ஒலி இசை மூலம் வெளிப்பட்டு இசைக்கு மெருகு சேர்த்தன. மகிழ்ச்சி, துயரம், கோபம், தனிமை போன்ற உணர்ச்சிகளின் இசை வடிவ வெளிப்பாடு இசையில் வகைகளைக் கொண்டுவரத் துணை புரிந்தன.

Wednesday, November 05, 2008

வரலாறு படைத்தது அமெரிக்கா

ஆம் நம்மால் முடியும்

வரலாறு படைத்தது அமெரிக்கா
அந்நாட்டை ஆளவந்தார் பராக் ஒபாமா
பலநூறு சாதனைகள் படைத்ததில் இதுவொன்றும்
பத்தோடு பதினொன்றே அல்ல அல்ல

புரையோடிப் போயிருந்த நிறவெறிப்
புண்ணைக் கூடத் தூர எறிந்து விட்டு
மனித நேயம் மிக்கவரும் வாழும்
அமெரிக்கா நாமேயென்று

கொட்டி முழங்குது சங்கு
எட்டி ஒலிக்குது முரசு
ஆம் நம்மால் முடியும் - ஆம்
அமெரிக்காவில் இதுவும் முடியும்

இதுவே இலங்கை
இந்தியா வானால்
நினைக்கவே பதறுது
பாழ்பட்ட நெஞ்சம்

சாதி, சமயம்
இனம், மொழி
கோத்திரம், காத்திரம்
தாங்காத நாத்தமெல்லம்
பார்த்தபின் முடியுமா நம்மால்

மாறுமா நம் சிந்தை
தேறுமா நம் நாடு

நம்மாலும் முடியும்
மனித நேயம் புரிந்து விட்டால்
நம்மாலும் முடியும் – ஆனால்
புரியுமா மனித நேயம்?

Monday, November 03, 2008

இசை - மொழி - தமிழ்

இசை - மொழி - தமிழ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதவுள்ளேன். அது கொஞ்சம் நீளமாக வருவதால் அதைப் பகுதிகளாகத் தொடர வேண்டியுள்ளது.
இசையின் தோற்றம், அதன் வளர்ச்சி, தமிழில் அதன் இடம் போன்றவற்றை அலச எண்ணியுள்ளேன். விரைவில் கட்டுரை தொடங்கும். தொடங்கும் வரை
மார்கழிப் பூவே பாடலைக் கேளுங்கள்.

Friday, October 24, 2008

தமிழ்ப் பள்ளிகளில் கடவுள் வாழ்த்து

தமிழர் மத்தியில் பல மதத்தவர்களும் இருப்பதால், நாம் மத சார்பற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. தமிழ் மொழியால் இணந்த ஒரு பெரு மக்கள் சமூகமென நாம் திகழ வேண்டும். உலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகை இதை கருத்திற் கொண்டே தான் போலும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் எந்த மதக் கடவுளையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு வணக்கம் செலுத்தாது தமிழனின் பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரவர் தமது விருப்பப்படி தமது மத வழிபாடுகளைக் கைக்கொள்வதில் எந்த விதத் தடங்கல்களையும் தமிழர் நிர்வாகங்கள் ஏற்படுத்தவும் கூடாது. மக்களின் மத நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், தமிழ்ப் பள்ளிகளில் பாடசாலை நாள் ஆரம்பத்தில் கடவுள் வாழ்த்து என்ற பழக்கத்தை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஔவையின் கருத்தோடும் மற்றும் பலரின் மூத்த அறிவுரைகளோடும் கலந்து ஒரு கடவுள் வாழ்த்தை இங்கே செயற்படுத்துவோமா?

கடவுள் வாழ்த்து

அம்மா அப்பா வணக்கம்
ஆசிரியர்களே வணக்கம்
இறையருள் வேண்டி வணக்கம்
ஈதல் செய்யவே இணக்கம்

உலகம் உய்யவே உழைப்போம்
ஊருடன் சேர்ந்தே வாழ்வோம்
எவர்க்கும் உதவத் தயங்கோம்
ஏலாதவரைக் காப்போம்

ஐயந்திரிபறக் கற்போம்
ஒற்றுமை யொன்றே நினைப்போம்
ஓதல் செய்தலை நிறுத்தோம்
ஔடதந் தவிர்க்க முயல்வோம்

(அ)தெலாம் வேண்டி வணக்கம்
வணக்கம் வணக்கம்

kadavul_vazhthu.mp3 - பாடலைக் கேட்க

மார்கழிப் பூவே ......

அண்மையில் என்னை கவர்ந்த ஒரு நல்ல பாடல். மிக அமைதியான அழாகான பாடல். செல்லிடப் பேசிகளின் அழைப்பு மணியாகக்கூட வைக்க நல்ல ஒரு பாடல். யாரையும் அதட்டாமல் குழப்பாமல் அமைதியாக அழைக்கும் ஒலி மிக அருமை.

மார்கழிப் பூவே ......

என்ற பாடல் மிக இனிமையாக இருக்கிறது. பாடலோ திகட்டாத இனிமை. பகிர்ந்து கொள்ள இதோ.


பாடல்

Tuesday, May 20, 2008

தமிழிசை - புது அனுபவம்

கர்நாடக சங்கீதம் எங்களில் பலருக்குப் பிடிப்பதில்லை. பிடிக்காமல் போனதற்குக் காரணம், எழுபதுகளில் பல பாடகர்கள் இலங்கை வானொலியில், ஒரு குறிப்பிட்ட சேவையில், "தரி னி னினி னானா னானா" என்று இழுத்துக் கொண்டே போய் எப்ப முடிப்பார்கள் என்று தெரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார்கள். இதனால் தொடங்கிய சில வினாடிகளிலேயே
வானொலியை நிற்பாட்டி விட்டு அப்பால் போய் விடுவோம், அதன் பின் எப்படிச் சங்கீதம் எங்களுக்குப் பிடிக்கும்?

புலம் பெயர்ந்த பின், சில கச்சேரிப் பக்கம் சென்று எட்டிப் பார்த்தால் அங்கே புரியாத மொழியில் புரட்டி எடுப்பார்கள், அது எப்படி எங்களுக்கு ஏறும். வழக்கம் போல் ஈழத்து பாடல்களும், தமிழ்த் திரைப் பாட்டுகளும், பக்திப் பாடல்களும் தான் எங்கள் இசை உலகம்.

இப்படி நிலைமை இருக்கையில், அண்மைக் காலங்களில் சில நல்ல கர்நாடக சங்கீத வித்துவான்கள், தமிழில் பல பாடல்களைப் பாடி அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நித்தியசிறீ மகாதேவன்,
சுதா ரகுநாதன்,
ஓ.எஸ். அருண்
என்று பலர் மிக நன்றாகப் பாடி என்னைப் போன்றவர்களைக் கவரத் தொடங்கியுள்ளார்கள். இவர்களின் பாடல்களால் ஈர்க்கப் பட்ட நேரத்தில் அருணா சாயிராம் என்று ஒரு பாடகர் இசை உலகையே கலக்கிக் கொண்டிருப்பது அறிந்து அவர் பாடல்களைக் கேட்டால், அவை எல்லோரையும் அசத்தி அசையாது இருந்து இரசிக்க வைத்திருக்கின்றன.

இந்த அரிய சேவையைப் பலர் YouTube மூலம் உலக இரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருப்பது ஒரு பாராட்டப் பட வேண்டிய விடயம்.

இதோ இங்கே அவரின் சில பாடல்கள் கேட்டுப் பாருங்கள்.


Sunday, April 20, 2008

இன்னொரு சுனாமி




தொப்புள் கொடி உறவு தமிழ் நாட்டுத் தமிழருக்கும் ஈழ நாட்டுத் தமிழருக்கும் உண்டு என்று பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறோம். அதனால் அந்தத் தொடுப்பு நிலப் பரப்பைத் ரிசிக்கச் சென்றேன் அண்மையில். தொப்புள் கொடியில் இருந்து அறுந்தவர்கள் ஈழத்தவர்கள் என்றால், தமிழக அன்னையின் தொப்புளாக இருக்கக் கூடிய இடம் ராமேசுவரம்-தனுசுக்கோடி தானே. போன வருடம் இந்தியா சென்ற போது, அழிந்து கொண்டிருக்கும் தனுசுக்கோடியைப் பார்க்கும் ஆவலைப் பூர்த்திசெய்ய அங்கே சென்றிருந்தோம்.

2004 டிசம்பர் 26 இல் ஆழிப் பேரலையில் அழிந்து எஞ்சியிருக்கும் பகுதிகளைத் தான் பார்க்க முடிந்தது. என்ன அநியாயம், சரியாக 40 வருடங்களுக்கு முன்னர் 1964 டிசம்பர் 23 இல் ஒரு ஆழிப் பேரலை இதே தனுசுக்கோடியில் ஊழித் தாண்டவம் ஆடியிருக்கிறது என்ற கல்வெட்டைப் பார்த்ததும் ஆண்டவன் மேலேயே கோபம் வந்தது. அந்தக் கல்வெட்டைப் படம் பிடித்தேன் பகிர்ந்து கொள்ள.

மிகப் பெரிய ஒரு நிலப் பரப்பைக் கடல் கொஞ்சங் கொஞ்சமாக ஆக்கிரமிக்கும் கோலம் நெஞ்சைப் பிழிகிறது. துபாயில், சிங்கப்பூரில் கடலில் தீவுகளைக் கடினப்பட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம், பெரும் நிலப் பரப்பைத் தீவுகளாக்கித் தொலைத்துக் கொண்டிருக்கிறது, கடலில். தற்போதைய தொழில் நுட்பங்களைக் கொண்டு, இந்தப் பிரதேசத்தை நன்கு பாதுகாக்க முடியும். அரசு முயல வேண்டும்.

சேது சமுத்திரச் சிற்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். சேதுக் கால்வாயையும் வெட்டுவோம், தொப்புள்கொடிப் பாலத்தையும் கட்டி அழியும் நிலப் பரப்பை மீட்கலாமே. கனடாவின், P.E.I.-New Brunswick ( http://www.confederationbridge.com/en/about_the_bridge/ )பாலத்தைப் பர்ர்த்தவர்களுக்கு இந்த திட்டம் ஒரு நிறைவேற்றக் கூடிய திட்டமே என்பது புரியும்.


Wednesday, February 20, 2008

உன் மொழியில் பாட மாட்டாயா?

தமிழா தமிழில் பாடு!
தமிழன் நான் ரசிக்க வேண்டும்.

இதைப் பலர், பல வடிவில் சொல்லி விட்டார்கள்.



வாலியின் கவிதை http://jeyapal.blogspot.com/2006/04/tamil-music.html

பாலசந்தர்/வைரமுத்துவின் குமுறல் சிந்து பைரவி படத்தில்.



எத்தனையோ பத்திரிகைகள் தலலயங்கம் தீட்டி விட்டன.
இங்கே ஒன்று பத்தோடு பன்னிரண்டாக. (நன்றி விகடன்)


இசை மணிகள் சிந்திப்பார்களா?


Friday, June 22, 2007

புளிக்கும் நினைவுகள்

ஒரு நாள் ஆப்பிள் ஒன்றைக் கடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அதன் சுவை எங்கோ சுவைத்த ஒரு சுவையைப் பொறியிற் தாக்கி ஞாபகப்படுத்தியது. நன்கு முயற்சித்த போது பொறியில் தட்டிய சுவை “செம்பழச்” சுவை என்பது உறைத்தது (புளித்தது). செம்பழச் சுவையென்றதும் அதனோடு கூடிய சகலதையும் கடின யோசனை செய்து அசை (சுவை) மீட்டுக் கொண்டேன். அதன் தாக்கம் புளிக்கும் நினைவுகள்.

யுத்தம் இல்லாத காலத்தில், இடம்பெயர முன்னர், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தெரு ஓரமாக ஓங்கி வளர்ந்த புளியமரம் ஒன்று. பெரிய கிளைகளைப் பரப்பி மிகவும் விசாலமாக வளர்ந்திருந்தது.

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக் கட்டி
புழுதியையே சட்டையாக அணிந்து திரிந்த காலத்தின் ஒரு பகுதி இந்தப் புளிய மரத்தின் கீழும் எனக்கும் என் தோழர்களுக்கும் கழிந்தது.

வசந்த காலத்தில், புதிய இலைகளுக்கான துளிர் வர ஆரம்பிக்கும். வெளிறிய பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு நிறத்தில் மிக அழகாகத் துளிர்க்கும். கைக்கெட்டிய உயரத்தில் இருக்கும் இந்தத் துளிர்களை சாப்பிட்டவர்களுக்குத் தெரியும் இதன் சுவை. புளியும் இல்லை உவர்ப்பும் இல்லை.

பின்னர் கொஞ்ச நாட்களில், புளியம்பூ பூக்கத் தொடங்கும். பூவும் சாப்பிட நன்றாக இருக்கும். துளிர் போலவே இருக்கும், கொஞ்சம் புளிப்புக் கூடியிருக்கும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் பிஞ்சு பிடிக்கும். அந்தப் பிஞ்சைச் “சுண்டங்காய்” என்று அழைப்போம். வளைந்து வளைந்து வடிவாகவும் இருக்கும். சுண்டங்காயின் சுவை இன்னும் கொஞ்சம் புளிப்புக் கூடி இருக்கும்.

சில வாரங்களின் பின், சுண்டங்காய் முத்திப் புளியங்காய் என்ற நிலைக்கு வரும். புளிப்பும் முத்தத் தொடங்கியிருக்கும்.

மேலும் சில வாரங்களின் பின், புளியங்காயானது, காய்க்கும் பழத்திற்கும் இடைப்பட்ட பருவமாகிய “செம்பழம்” என்ற நிலைக்கு வரும். இந்தச் சுவை தான் நான் கடித்த ஆப்பிளில் இருந்தது. நல்ல பச்சை நிறத்திலிருந்த புளியங்காய் இப்பொழுது கொஞ்சம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும். காயும் கனியத் தொடங்கும், சுவையும் மாறத் தொடங்கும். இப்பொழுது புளியம் பழத்தின் ஓடும் கொஞ்சம் நீக்கக் கூடியதாக இருக்கும். ஓடு நீக்கிய செம்பழம் கொஞ்சம் புளிப்புக் குறைந்தும் இருக்கும்.

இதன் பின் புளியம் பழம் தோன்றும். அதுவும் எங்கள் வாயிலிருந்து தப்பாது. ஆனால், புளியம்பழம் பழம் என்ற பேருக்காகவேனும் இனிக்க மாட்டாதே!!!!!. நாங்களும் இடைக் கிடையே புளியமரச் சொந்தக்காரனிடமும் பேச்சு, திட்டு, எறி வாங்கத் தப்பியதில்லை.

புளியைத் தின்று வாயைப் புண்ணாக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனால் உறைப்புக் கறி சாப்பிட முடியாமல் வீட்டிலும் அகப்பட்டுக் கொளவதும் …….

புளிப்போடு வந்து இனிக்கும் நினைவுகளும் …….

(வலையில் அகப்பட்ட சில படங்களுக்கு நன்றி)

Friday, March 30, 2007

என் வீட்டுப் பூக்கள்

அழகுக்கின்னொரு பெயர் பூவா?
மனவமைதிக்கரு மருந்து பூவா?

நிறங்களின் வித்தை பூவா?
மனங்களின் விம்பம் பூவா?

வண்டுக்கு மதுச்சாலை பூவா?
பெண்டுக்குப் பூச்சூட்டப் பூவா?

இயற்கையின் ஓவியம் பூவா?
இயற்கையின் காவியம் பூவா?

அழகே பூவா?
பூவே அழகா?


என்று மயங்க வைக்கும் பூக்களின் படங்கள் சில.

Monday, March 26, 2007

மரம் பற்றியொரு பாடல்

கீழேயிருக்கும் இணைப்பில் மரம் என்ற சொல்லை எப்படியெல்லாம் பாவித்துக் கவி புனைந்தார் நம் முன்னோர் என்று பாருங்கள். இதை திரட்டித் தருபவர் அகத்தியர் குழுவை நடாத்தும் தமிழறிஞர் மருத்துவர் ஜெயபாரதி.
வாழ்க அவர் பணி.

http://www.visvacomplex.com/Maramadhu_MaraththilERi___.html

Tuesday, March 20, 2007

பீத்தல்

இன்று மதனின் மாறாட்டத்தைச் சாடி எழுதியிருந்த பதிலடிக்கு ( பார்க்க http://varalaaru-ezine.blogspot.com/2007/03/blog-post.html ) ஒரு பின்னூட்டம் இடும்பொழுது தானாக வந்து விழுந்தது "பீத்தல்" என்ற சொல். இது ஈழத்தில் பாவனையில் இருக்கும் சொல் தான். தமிழக மக்களும் இதைப் பாவிப்பதைக் காண்கிறேன். இந்தச் சொல்லில் இரு பொருள்கள் இருப்பது உடனே உறைக்கிறது.

1. பீத்தல்: ஈழத்தில் ஓட்டை அல்லது துவாரம் என்ற பொருள் படப் பாவிக்கப் படுகிறது. பீத்தல்ப் பேணி, பீத்தல் சட்டை என்று சொல்லப்படும்.

2. பீத்தல்: பிதற்றல் என்ற சொல்லின் மருவிய வடிவமாகத் தான் தமிழகத்தில் அறியப் படுகிறது என்று எண்ணுகிறேன். ஈழத்தில் இப்படிப்பட்ட பாவனையில்லை என்பது என் விளக்கம். "மதனின் பீத்தல் தெரிகிறது" என்று சொல்லும் போதும், மதன் பிதற்றுவது தெரிகிறது என்றல்லாமல், மதனில் (அல்லது மதனின் அறிவில்) இருக்கும் ஓட்டை தெரிகிறது என்பது தான் விளக்கம்.

அன்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

Thursday, February 15, 2007

உறைந்து விட்ட நயகரா நீர் வீழ்ச்சி

நண்பர் ஒருவர் இந்தப் படங்களை அனுப்பியிருந்தார். ஓடிப் போய்ப் பார்த்து விடுவோம். இந்தக் குளிரிலும் மீற்றர்க் கணக்காகப் பொழியும் பனியிலும் இது நடந்திருக்கும். நயகரா என்ன எரிமலையே உறைந்துவிடும். முதலில் இங்கே பார்த்து விட்டுப் பின்னர் நேரிற் பார்ப்போம்.







1911 இல் நடந்ததைத் தான் இங்கே தர முடிந்தது.
இந்த ஆண்டில் உறைந்தால் நாங்கள் அதிட்டசாலிகள். உறையலாம். பார்க்கலாம்.

Tuesday, February 13, 2007

பார்த்த படம்

நான் அவ்வப் பொழுது பார்க்கும் படங்கள் பற்றிய மதிப்பீடுகளை இங்கே தரலாம் என்று எண்ணி இதை ஆரம்பிக்கிறேன். தமிழ்ப் படங்களில் பலவற்றை நிம்மதியாக ரசித்துப் பார்க்க முடிவதில்லை. சிறார்கள் பார்க்க முடியாதவாறு பல பைத்தியக்காரக் காட்சிகள். அதீத கற்பனைச் சண்டைகள். இவற்றையெல்லாம் தாண்டி எவை பார்க்கக் கூடியனவாகத் தேறுகின்றன என்று பார்ப்போம்.

  • வேட்டையாடு விளையாடு - இரண்டு பாடல்கள் கேட்கலாம் (பார்க்கலாம் அல்ல) என்பதைத் தவிர முழு நீள நேர விரயம். குழந்தைகளோடு சும்மா விமானப் பயணத்திற் கூடப் பார்க்கக் கூடாது.
  • பொய் - பாலச்சந்தர் படம். குடும்பத்தோடு நெளியாமல் பார்க்கக் கூடிய படம். எல்லோருக்கும் பிடிக்குமோ என்பது சொல்ல முடியாது. எனக்குப் பிடித்துள்ளது.பாடல்களும் பரவாயில்லை
  • வரலாறு - பரவாயில்லை, குழந்தைகளுடன் பார்க்க முடியாது. கதையில் பல ஓட்டைகள் உண்டு. நல்ல பாட்டுகளும் உண்டு.
  • தாமிரபரணி - குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம். பாடல்கள் நன்றாக உள்ளன.
  • டிஷ்யூம் - படத்தின் பெயர் பிடிக்கவில்லையேயயினும், படம் அருமையானது. நல்ல பாடல்கள். நல்ல நடிப்பு.
  • மொழி - குடும்பத்தோடு இருந்து பார்த்து மகிழ ஒரு அருமையான படம். நல்ல பாடல்கள், நகைச்சுவை என்று அழகான ஒரு படம்.
  • போக்கிரி - விஜயின் பத்தோடு பதினோராவாது குப்பை.
  • தீபாவளி - போக்கிரியை விடப் பரவாயில்லாத குப்பை.
  • வெயில் - அழுத்தமான கதை, இயற்கையான காட்சிகள். ஆனால் அதை வெறித்த்னச் சண்டைக் காட்சிகளுடனும் வன்ம மனிதர்களுடனும் தந்திருப்பது, படத்தைக் குடும்பத்தோடு பார்க்க முடியாமல் வைக்கிறது. இந்தியாவில், இதை மக்கள் - சிறுவர்கள் - எப்படிப் பார்க்கிறார்கள் என்று எண்ன வைக்கிறது.

Tuesday, January 02, 2007

தேசத்தின் குரல் - இரங்கல்

“தேசத்தின் குரல்” பாலசிங்கம் அவர்கள் மறைவு ஒரு பேரிழப்பு. அவர் கடும் சுகவீனமுற்ற செய்தி முன்னரே வந்து அதிர்ச்சியைத் தந்திருந்ததால், அவரின் இறப்புச் செய்தி பேரதிர்ச்சியை எமக்கு அளிக்கவில்லை. ஆனாலும், இறப்பு, அதுவும் ஒரு பெரும் சாணக்கியனின் இறப்பு, தாங்க முடியாத சோகமாகக் கவிழ்ந்தது எம் மேல். அவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்ளும் அதிட்டம் எங்கள் குடும்பததவர்க்குக் கிடைத்தது சோகத்திலும் ஒரு நற் பாக்கியம்.

வாகனங்களால் நிரம்பி வழிந்த தெருக்களில் வாகன நெரிச்சலைக் கட்டுப் படுத்த இலண்டன் பொலிசார் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. மக்கள் வெள்ளமோ மண்டபத்தின் வெளியே மலைச் சரிவில் போடப்பட்ட வீதி போல் நெளிந்து நெளிந்து தெரு வரை இருக்க நாமும் அதில் இணைந்து எம் அஞ்சலியையும், வீர தீர வணக்கத்தையும் செலுத்தக் கூடியதாக இருந்தது.

அவர் மறைவிற்கு இரங்கல்:

பறந்து விட்டது பாலா உயிர்
இறந்து விட்டது பண்புப் பயிர்
அணைந்து விட்டது அறிவுச் சுடர்
தொலைந்து விட்டது துருவக் கதிர்

கலங்கி நிற்குது களமாடுந் தலை
கசங்கி நிற்குதுன் கனிவான துணை
குலுங்கி அழுகிற குரல் கேளாயோ
கலங்காது சாவைக் கரம் பற்றியோனே

சேனைத் தலைவன் தேடும் ஆணித் தரம்
சர்வ தேசத்தில் ஒலித்த சிங்கக் குரல்
இராச சாணக்கியத்தில் தேசக் குரல்
பால சிங்கத்தின்பட் டாசுக் குரல்

தேசத்தின் குரல் தாங்கி நிற்கும்
சாணக்கியன் குரல் தூங்கி நிற்கும்
சோகத்திலும் நாம் வேண்டி நிற்பது
தேசப் பெருமகனின் புகழுடல்

Thursday, November 09, 2006

இலவசமாய்ப் புத்தகங்கள்

அள்ளு கொள்ளையாகக் குவிந்து இருக்கின்றன அரிய பெரிய தமிழ்ப் புத்தகங்கள். அனைத்தும் ஒருங்குறித் தமிழில் வலையேற்றி இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய வேலை. எவ்வளவு பெரிய தொண்டு.

வாழ்க அவர்கள் சேவை.

நீங்களும் பயன் பெற இங்கே அமத்துங்கள்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

Monday, October 09, 2006

விஜய் வளர்கிறாரா?

நடிகர் விஜயின் வளர்ச்சிக்குச் சில வரிகள்.

அண்மைக் காலங்களில் நடிகர் விஜயின் படங்களை எல்லோரும் விரும்பிப் பார்க்குமளவிற்கு மக்கள் மத்தியில் அவை பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. குழந்தைகள் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக விஜயின் படங்களும் அவரது பாத்திரங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பும் ஒரு நடிகராக அவர் வளர்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே. நல்ல திசையில் அவரது தொழில்விருத்தி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய விடயமும் உள்ளது.

அண்மையில் அவரது ஆதி, பகவதி, சிவகாசி, மதுர போன்ற படங்களை பார்க்க நேர்ந்தது. படங்களில் அவர் வழக்கம் போலவே நல்ல மனிதனாக வந்து நல்லது செய்கிறார். பாடல்கள், நடனம் என்று குழந்தைகள் விரும்பும் அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவர் ஒரு மகா தவறைத் தனக்கும் தெரியாமல் இப் படங்களில் செய்திருப்பது குழந்தைகளின் செயல் மூலம் அவதானிக்கப்படக் கூடியதாக இருந்தது. குழந்தைகள் சண்டைக் காட்சிகளை ரசிக்கிறார்கள். ஆனால் மேற் சொன்ன படங்களில் இருப்பவை, சண்டைக் காட்சிகள் அல்ல கொலைக் காட்சிகள். அவற்றைக் காணக் குழந்தைகள் கிலி கொள்கிறார்கள், வெறுக்கிறார்கள், ஓடி ஒளிக்கிறார்கள். அவ்வளவுக்குப் பயங்கரமான காட்சிகள் அந்தச் சண்டைகள். குழந்தைகளின் அபிமான நடிகர் குழந்தைகளின் மனோ நிலையைப் புரிந்து சண்டை காட்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். வேறு பல படங்களிலும் மகா பயங்கரமான கொலைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால், அந்தப் படங்களின் நடிகர்கள் விஜய் போல் குழந்தைகளின் அபிமானம் பெற்றவர்களல்ல. சூர்யா சமீப காலமாக அந்த இடத்தை நெருங்கி வருகிறார், அவரும் இந்தக் கொலைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தக் குலை நடுங்க வைக்கும் கொலைப் பயங்கரங்களை விஜய் தன் படங்களில் இருந்து நீக்கா விட்டால் அவர் ஒரு ரசிகர் பட்டாளத்தை மிக மலிவாக இழக்கப் போகிறார். இன்றைய குழந்தைகள் தான் அவரை நாளை உச்ச நடிகர் என்ற தானத்திற்கு ஏற்றி வைக்கப் போகிறவர்கள் என்பதை விஜய் கருத்திற் கொண்டு தன் படங்களையும் காட்சிகளையும் தெரிவு செய்ய வேண்டும். காசாசையில், தயாரிப்பளர்களும், இயக்குனர்களும் எப்படிப் பட்ட கதைகளையும் காட்சிகளையும் கொண்டு வருவார்கள். அதைத் தணிக்கை செய்ய வேண்டியது முன்னணிக் கதாநாயகனின் பொறுப்பு. வளரும் நாயகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதோடு மட்டுமில்லாமல், குழந்தைகள் பார்க்கக் கூடிய படங்களும் வர வேண்டும் என்ற அற்ப ஆசையில் ஒரு எழுத்து.

Wednesday, October 04, 2006

கணினியில் தமிழ் - பகுதி 7



-1- - -2- - -3- - -4- - -5- - -6-



கணினியில் தமிழ் - பகுதி 7

இப்படியாகக் கணினியில் தமிழ் தவழத் தொடங்கி, எழுந்து நடை பயின்று, இன்று ஒருங்குறியாக நிமிர்ந்து நிற்கிறது. பற்பல இணையத் தளங்களும் மென் பொருட்களும் தேடல் இயந்திரங்களும் இப்பொழுது ஒருங்குறி மூலம் மிகப் பிரபலமாகி விட்டன. ஒருங்குறி எழுத்துருக்களை இப்பொழுது கணினியில் அடிப்படையிலேயே சேர்த்தும் விட்டார்கள். இதனால் எல்லோரும் இன்புற்றிருக்க இலகுவாகக் கோலோச்சுகிறது ஒருங்குறி.

இணையக் கடைகள், பிறரின் கணினிகள் போன்றவற்றில் ஈ-கலப்பையோ அல்லது கீ-மானோ இல்லாதவிடத்து, சுடச் சுட ஒருங்குறியில் அல்லது பாமினியில் தமிழை அடிப்பதற்கு உதவியாக திரு. சுரதா யாழ்வாணன் , ஈழம் எழுதி என்ற கருவியையும் இணையத்தில் தந்துளார். அதன் தொடுப்பைப் பின்னாலே தருகிறேன்.

ஒருங்குறித் தமிழ் இப்பொழுது எதிலும், ஏன் எமது வலைப் பூக்களிலுங் கூடக் கோலோச்சுகின்ற போதும், ஆங்காங்கே பல வல்லுனர்கள் கணினியில் தமிழின் இருப்பைச் செம்மை செய்ய அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் கூட டாப் (TAB), டியூன் (TUNE) என்றெல்லாம் பல முனைகளில் ஆய்வுகள் நடக்கின்றன. எல்லாம் நன்மையைத் தமிழுக்கும் தமிழருக்கும் தரட்டும்.

இதுவரை என் தொடரைத் தொடர்ந்து வந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இதில் இருக்கும் குறைகள், தவறுகள் என்பவற்றை தயவு செய்து மன்னியுங்கள். அப்படியே, உங்கள் கருத்துக்களை எனக்குப் பின்னூட்டமாகவோ தனி மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள்.

மீண்டும் நன்றி, வணக்கம்.


பிற் குறிப்பு:

மேலதிகமாக வாசிக்க விரும்புபவர்களுக்காக சில இணையத் தளங்களின் முகவரிகளைக் கீழே தருகிறேன். இவை தவிர மேலும் முகவரிகள் தெரிந்தவர்கள் இங்கே அவற்றை இடுங்கள்.

கீ-மான்:: keyman
ஈ-கலப்பை:: http://thamizha.com/modules/mydownloads
ஈழம் எழுதி :: http://www.suratha.com/eelam.htm
ஒருங்குறி :: http://unicode.org/faq/tamil.html
தகுதரம் :: http://www.tscii.org/
தமிழா :: http://thamizha.com/
விக்கிபீடியா :: http://ta.wikipedia.org
தமிழ்.நெட் :: http://www.tamil.net/
அகத்தியர் மடற்குழு :: http://groups.yahoo.com/group/agathiyar/
அகத்தியர் ஆவணம் :: http://www.treasurehouseofagathiyar.net/
தமிழாராய்ச்சி மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil_araichchi
தமிழாராய்ச்சி :: http://www.araichchi.net/
மெய்கண்டார் மடற்குழு :: http://groups.yahoo.com/group/meykandar/
தமிழுலகம் மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil-ulagam/
உத்தமம் :: http://www.infitt.org/
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் :: http://www.tamilvu.org/
தமிழ் மின்னூலகம் :: http://tamilelibrary.org/
மதுரைத் திட்டம் :: http://www.tamil.net/projectmadurai/
இதர :: http://www.geocities.com/athens/7444/


-1- - -2- - -3- - -4- - -5- - -6-