திரைப் படப் பாடல்களின் காப்புரிமை பற்றிய சர்ச்சைகளும் தடைகளும் நாளாந்தம் நாம் பார்க்கும் ஒரு நிகழ்வாகி விட்டது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இக் காப்புரிமைகள் பற்றி யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லாமே வியாபார யுகமாகி விட்ட இக் காலத்தில் இது ஒரு பெரும் பாடாகி விட்டது.
அண்மையில் கூட ஒரு இசையமைப்பாளர் காப்புரிமை தொடர்பாக ஒரு வழக்கில் மேன் முறையீடு செய்து, தான் இசையமைத்திருந்த பாடல்களுக்குக் காப்புரிமை பெற்றுக் கொண்டதைச் செய்தியாகக் கேள்விப்பட்டோம்.
பாடல்களுக்குக் காப்புரிமை என்ற பூட்டைப் போட்டுப் பூட்டுவதால் நல்ல இசை இலகுவில் மக்களைச் சென்றடைவது கட்டுப்படுத்தப் படுகிறது. பூட்டி வைத்த பொக்கிசமாக யாருக்கும் பயன்படாது போவது எவ்வளவு அநியாயம். சிதம்பரத்தில் மாட்டிக் கொண்ட திருமுறைகள் போல் ஒரு நிலை உருவாகுமே.
நாட்டுப் பாடல்களையும் நாடோடிப் பாடல்களையும் யாராவது காப்புரிமை செய்து வைத்திருந்து இருந்தால் நாம் இப்போது இரசிக்கும் பல பாடல்கள் உருவாகியிருக்க மாட்டாது.
திரைப் படப் பாடல்களை எடுத்துக் கொண்டால், அது யாருக்கு உண்மையில் சொந்தம்?
திரைப் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் படத்திற்கான முழுச் செலவையும் பார்த்துக் கொள்கிறார். படத்தில் இடம் பெறும் எல்லா வேலைகளுக்கும் சம்பளம் கொடுத்தே அத்தனை விளைவுகளும் பெற்றுக் கொள்ளப் படுகின்றன. ஆகவே, கதை, வசனம், பாடல்கள், உட்படத் திரைப்படம் முழுவதுமே தயாரிப்பாளருக்குச் சொந்தம். பாடல்களில் கூட பலரின் பங்களிப்பு உண்டல்லவா? பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்கள் இசைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற பலரின் பங்களிப்பில் உருவாவது தான் பாடல்கள். மேற் சொன்ன பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் அவரவர்க்கான கூலி வழங்கப் பட்டாகி விட்டது. அதனால் பாடலின் உரிமையை இசையமைப்பாளர் ஒருவர் கோருவது சரியல்ல.
மேலும், படம் எடுக்கப்பட்ட பின்னர், அது வெளியாகி ஓடும் போது, பொது மக்கள் அதற்கு அனுமதிச் சீட்டைக் காசு கொடுத்துப் பெற்றுப் பார்க்கிறார்கள். இதன்படி பார்த்தால் வெளியிடப்பட்ட பின்னர் ஒரு திரைப் படம் பொது மக்களுக்கே சொந்தம். அதாவது அது ஒரு பொதுச் சொத்து. அந்தப் பொதுச் சொத்திலிருக்கும் பாடல்களை தனியொருவரோ அல்லது ஒரு கம்பனியோ உரிமைப் பதிவு செய்து தடைகளை விதிப்பது முறையல்ல.
3 comments:
அருமை
bravo
நன்றி நாகேந்திர பாரதி அவர்களே.
Post a Comment