Sunday, August 13, 2017

நினைவாலே சிலை செய்து

நினைவாலே சிலை செய்து

அந்தமான் காதலி படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
பாடியவர்கள்: யேசுதாஸ், வாணி ஜெயராம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விசுவநாதன்

இந்தப் பாடலை கேட்கும்போது பின்வருமாறு ஒலிக்கும்.
ஆண்:  
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
தெருக்கோவிலே ஓடி வா ஆ...  
தெருக்கோவிலே ஓடி வா...
பெண்:
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ...
திருக்கோவிலே ஓடி வா...

இதில், ஆண் பாடியதைத் தவறென்றும் தமிழ் உச்சரிப்புத் தெரியாத பாடகர் பாடியதால் தவறிழைத்தார் என்றுங் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகிறது.

திரு. யேசுதாஸ் இவ்வளவு ஆண்டுகளாகத் தமிழிற் பாடி வருகிறார், இன்னும் அவருக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லை என்பது ஒரு நெருடல் தான். நம்மில் எத்தனையோ பேர் எத்தனையோ மொழிச் சூழலில் வாழும் நிலை ஏற்பட்ட போது அந்தந்த மொழிகளைப் பேசும் ஆற்றலை ஒரு ஐந்து ஆண்டுகளுக்குள் பெற்று விடுகிறோம். ஆனால் சிலருக்கு இது முடிவதில்லை. விட்டு விடுவோம்.

திரு – தெரு
திரு என்ற சொல்லை ஒரு மலையாள மொழியார்க்கு உச்சரிக்கத் தெரியாதென்பது சரியான வாதம் இல்லை. மலையாளத்தில் திரு என்ற சொல் தாராளமாக உள்ளது. உதாரணம்: திருவனந்தபுரம். ஆக, திரு. யேசுதாசுக்கு, திரு என்பது ஒரு தடையல்ல.

கவிஞரோ இசையமைப்பாளரோ பாடற் பதிவின் போது இருந்திருக்கவில்லை, அதனாற் திருத்தப் படாமல் போய்விட்டது என்று ஒரு காரணத்தைப் பின்னாளில், திரு யேசுதாஸ் அவர்கள் கூறியிருந்தார். அதுகூட நம்பும் படியாக இல்லை. ஏனென்றால் இந்தப் பாடல் பதிவான காலத்தில் (1978) பாடகர்கள் தத்தம் வசதிக்கேற்ப வெவ்வேறு நேரங்களிற் குரலைப் பதிவு செய்யும் வசதி வந்திருக்கவில்லை. எனவே இருவரும் சேர்ந்தே பாடிப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது, அருகிலிருந்து பாடிய வாணி ஜெயராம் அவர்கள் மிக அழுத்தந் திருத்தமாகப் பாடியதைக் கவனித்துத் திருத்தியிருக்கலாம்.
ஆக, இங்கே திருத்த வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை என்பது வெளி வருகிறது.

என் மனதிற் படும் காரணம் இதோ:
ஆண் பாடும்போது, ”தெருக்கோவிலே” என்று விளிப்பதும், பெண் பாடும்போது “திருக்கோவிலே” என்று விளிப்பதும் நோக்கத்தோடு தான் நடந்திருக்கிறது. அதாவது, அந்தப் படத்தில் வரும் பெண், பணமோ செல்வாக்கோ படிப்போ இல்லாத ஒரு ஏழைப் பெண்ணாகவே வருகிறாள். ஆனால், நாயகனோ ஒரு பெரிய ஆள். இந்த நோக்கில், நாயகனை மரியாதைக்குரிய திருக்கோவிலாகவும், பெண்ணின் ஏழ்மையைக் கருதி அவளை ஒரு தெருவிற் கிடந்த மாணிக்கமாகக் கருதி தெருக்கோவில் என்றும் விளித்திருக்கலாம்.

இந்தக் கருத்துப்படக் கவிஞரே எழுதியிருக்கலாம் அல்லது பாடற் பதிவின் போது இருந்தவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

எனவே இங்கே திரு. யேசுதாசில் தவறு காணப்படவில்லை என்பது என் கருத்து.







3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... சரி தான்...

ராஜி said...

எனக்கு பிடிச்ச பாட்டு. அருமை

Jeyapalan said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன், ராஜி.