Monday, March 21, 2022

தமிழ் நூல்களின் தூய்மை

 ஆதி காலம் முதல் அண்மையில் ஒரு ஐநூறு ஆண்டுகள் முன்னர் வரை, தமிழில் எழுந்த நூல்கள் எல்லாம் பாடல் வடிவில் இருந்துள்ளன. அவையும் பேச்சுத்தமிழ் தவிர்த்து எழுத்துத் தமிழிலேயே ஆக்கப்பட்ட்டுள்ளன. அதற்கு ஒரு காரணம் இயற்றப்படும் நூல்கள் தமிழின் தரத்தை பேணவேண்டும் என்பதே. அத்தோடு இயற்றப்படும் நூல்கள் பல அறிஞர்கள் கூடிய ஒரு குழுமத்தில் அரங்கேற்றப்படல் வேண்டும். அந்த அரங்கேற்றத்தில், அந்த நூல்கள் தேற வேண்டும். தேறிய நூல்களே வெளியிடப்படும். தேறாதவை கிழித்தெறியப்படும். 

ஆக, அந்தக் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள், இலக்கியங்கள் எல்லாம் தரத்தேர்வுக்குள்ளாகித் தெரிவு செய்யப்பட்ட தரம் வாய்ந்த நூல்களே.

உரைநடையில் ஆக்கங்கள் இருந்திருக்கவில்லை. இலக்கியங்களோ நூல்களோ உரைநடையில் எழுதப்படுவது அந்தக் காலத்தில் வழைமையில் பின்பற்றப்படாதிருக்கலாம். அல்லது உரைநடையில் எழுதும்போது தமிழின் தரம் குறைவடையும் நிலை இருந்திருக்கலாம்.

இவ்வாறாக, தமிழின் தரம் குன்றாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக நூல்களை இயற்றி வெளியிட்டு வந்துள்ளனர் நம் மூதாதையர்.

மிக அண்மைக்காலமான ஒரு நூறு இருநூறு ஆண்டுகளாக, உரைநடை நூல்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அவையும் மிக அண்மைக் காலம் வரை, தரமான எழுத்து நடைத் தமிழில், தமிழின் தரம் கெட்டுப்போகா வண்ணம் கவனமெடுத்து இயற்றப்பட்டன.

ஆனால் பின்னர் தோன்றிய எழுத்தாளர்கள் பலர், பேச்சுத்தமிழில், வட்டார வழக்குகளில் என தரம் குறைந்த தமிழில் நூல்களை இயற்றி வருவதைக் காணலாம். தற்கால ஆக்கங்களுக்கு ஒரு தரத்தேர்வு இல்லை. யாரும் எதுவும் எழுதலாம். புத்தகங்களாக வெளியிடலாம் என்ற சுதந்திரம், மொழியைச் சிதைக்கும் பணியைச் செய்கிறது.

திரைப்படங்கள் கூட இந்த வகையில் தமிழ்  சிதைவுக்கு கை  கொடுத்து வருகின்றன. நாடகத் தமிழில் படம் எடுத்தால் ஓடாது என்று சொல்பவர்கள், பழைய படங்கள் எப்படி வெளிவந்தன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பாடசாலைப் பாடப் புத்தகங்களில் கூட இந்தத் தரமின்மை ஊடுருவி விட்டது. மழலைகள் பயிலும் பாடல்களில் கொச்சைத் தமிழ். குழந்தைகள் தவறான தமிழைப் பயின்று பெரியவர்களானபின், அவர்களும் எழுத்தாளர்களாக நேரிடும்போது, அவர்களின் ஆக்கங்களில் எப்படி நாம் தரத்தை எதிர்பார்க்கலாம்?

இலக்கியத் தமிழ் எல்லோருக்கும் புரியாது, அதனால் இப்படி எழுத வேண்டியுள்ளது என்று காரணங் காட்டினார்கள் இந்த நடையில் எழுதிய எழுத்தாளர்கள். தமிழ் படித்த ஒருவருக்கு எல்லாத் தமிழ் சொற்களும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. சொல்லறிவை வளர்க்கவும் தான் மக்கள் நூல்களை வாசிக்கிறார்கள். அப்படி வாசித்து வளர்ச்சி பெற நூல்கள் உதவும். தமிழறிவை வளர்க்க நூல்களை வாசிக்கும் ஒருவரின் கையில், தற்காலப் புத்தகங்கள் கிடைத்தால், அவர் அறியப்போவது தமிழா? அவ்வாறு அறியப்பட்ட தமிழ் பின்னர் இன்னொருவருக்குச் செல்லும்போது தமிழ் எப்படிச் சீரழியும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அதனால் தான் நம் முன்னோர் மிகவும் கட்டுக்கோப்பாக நூல்களை இயற்றி எங்க்களுக்கு விட்டுச் சென்றுள்ளனர். நாமும் எம் சந்ததிகளுக்கு நல்லதைக் கொடுப்போமாக.



No comments: