எம் மத்தியில் நிலவும் மரியாதை “ர்” பற்றி முன்னர் ஒரு கட்டுரையில் பார்த்தோம். அதாவது, ஆண்களின் பெயர்கள் “ன்” இல் நிறைவடையும் போது அந்த “ன்” ஐ “ர்” ஆக மாற்றும் ஒரு வேண்டாத பழக்கம்.
கந்தன் => கந்தர்
சம்பந்தன் => சம்பந்தர்
இது ஒரு தேவையற்ற பெயர்ச் சிதைப்பு அத்துடன் இந்தப் பழக்கத்தைத் தமிழும் தமிழரும் கைவிட வேண்டும் என்பதே அந்தக் கட்டுரையின் சாரம்.
இந்த மரியாதை “ர்” தவிர வேறு வகையான மரியாதைக் குறிப்புகளால் தமிழ் சிதைவடையும் நிலையைச் சற்று நோக்குவோம்.
இஞ்சருங்கோ
தமிழர் குடும்பங்களில் கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் பெயர் சொல்லிக் கூப்பிடுவதைத் தவிர்ப்பதுண்டு. ஒருவரை ஒருவர் அழைக்க ஏதாவது ஒரு முறையைக் கையாள்வார்கள். குழந்தை பெற்றவர்களாக இருந்தால், குழந்தைகளின் முறையால் அப்பா என்றோ அம்மா என்றோ அழைப்பார்கள்.
பல இடங்களில், “இஞ்சர்” என்ற சொல் கணவனால் மனைவிக்குக் கொடுக்கப்படும் பெயர். அது “இங்கே பார்” என்பதன் சுருக்கமான பேச்சுவாக்கு. இந்த “இஞ்சர்” என்பது “இஞ்சரப்பா” என மாற்றம் பெற்று கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அழைப்பர்.
இஞ்சரப்பா = இஞ்சர் அப்பா
இந்த வகையில், இஞ்சர் என்று மனைவியைக் கணவன் அழைப்பார்.
ஆணாதிக்க சமூகத்தில், மேலதிக மரியாதையோடு, மனைவி கணவனை அழைக்க இஞ்சர் என்பதைப் பயன்படுத்தும் போது அது ஒருமையாகத் தொனிப்பதால் அதை மரியாதைப் பன்மைக்குள்ளாக்கி, “இஞ்சருங்கோ” என்று வந்து விடுகிறது.
இந்த “ங்கோ” எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
ஏவல் வினைச் சொற்கள் பன்மை வடிவில் “ங்கள்” விகுதி பெறுவது எங்களுக்குத் தெரியும்.
வா - வாருங்கள்
போ - போங்கள்
நில் - நில்லுங்கள்
கேள் - கேளுங்கள்
இது மருவிக் குறுகும்போது, பேச்சு வழக்கில் “ங்கோ” அல்லது “ங்க” வடிவைப் பெறுகிறது.
வா - வாருங்கள் - வாருங்கோ - வாங்கோ - வாங்க
போ - போங்கள் - போங்கோ - போங்க
நில் - நில்லுங்கள் - நில்லுங்கோ - நில்லுங்க
கேள் - கேளுங்கள் - கேளுங்கோ - கேளுங்க
இவ்வாறே
இங்கே பார் - இஞ்ச பார் - இஞ்சர்
இங்கே பாருங்கள் - இஞ்ச பாருங்கள் - இஞ்சருங்கள் - இஞ்சருங்கோ
என்னங்க
என்ன? - என்னங்கோ? - என்னங்க?
சரி - சரியுங்கோ - சரியுங்கோ - சரிங்க
அம்மா என்ன சொன்னீர்கள்? - இது மரியாதைக் குறைவாம்!
அம்மா என்னங்க சொன்னீர்கள்? - இது மரியாதை உயர்வாம்!
இது ஒரு தமிழ்க் கொலையே!
தேவையற்ற இடங்களில் “ங்கள்” என்ற பன்மை விகுதியைச் சேர்த்தல் என்பது தமிழறிந்தோர் செய்யக்கூடாத செயல்.
எது, என்ன, யார், எங்கே என்பவற்றோடு “ங்க” சேர்த்து உபயோகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
சில இடங்களில் வினைச் சொற்களில் பிழை நேர்கிறது.
போகிறார்கள் -> போகிறாங்கள் -> போகிறாங்க - இது கொஞ்சம் பரவாயில்லை.
ஆனால்: போகிறேன் என்பதற்கு “போகிறேனுங்க” என்று சொல்லும்போது பெரும் பிழையே!
“அவன் போகிறானுங்க” - இன்னொரு தவறு.
வினைச் சொற்கள் மரியாதை நோக்கில் பன்மை விகுதி பெற்று வருவதும் அது குறுகி, மருவி வருவதும் பரவாயில்லை. ஏனைய சொற்கள் இந்த மரியாதைப் பன்மையைத் தூக்கும்போது தான் மரியாதைக் கேடு வருகிறது.
ஒருத்தங்க
இப்பொழுதெல்லாம் ஒருவர் என்பதை ஒருத்தங்க என்று பரவலாகச் (தமிழக தொலைக் காட்சிகளில் பார்க்கலாம்) சொல்கிறார்கள். அதெப்படி வருகிறது?
ஒருவர் - ஒருத்தர்
இந்த ஒருத்தர் என்பதற்கு மரியாதை சேர்க்கும் முகமாக அதற்குப் பன்மை விகுதி!
அலங்கோலம்!
இலகுவாக ஒருவர் என்று சொல்லக் கூடிய சொல்லை, ஒருத்தர் என்று சொல்லி, அதிலிருந்து ஒருத்தர்கள் ஆகிப் பின்னர் அது மரியாதை “ங்க” சேர்க்கப்பட்டு உருவாகிறது ஒருத்தங்க! மிகக் கொடுமை!
அப்பாங்க
அவர் எனது அப்பா. இந்த வசனத்தைச் சிலர் இப்படிச் சொல்கிறார்கள்.
அவர் எனது அப்பாங்க. சில வேளை “அவருங்க என் அப்பாங்க” என்றும் பேசுகிறார்கள்.
வேறு: அது என்னுடையது - அது என்னுடையதுங்க.
நல்லது -> நல்லதுங்க
போக வேண்டாம் -> போக வேண்டாங்க
கூடாது -> கூடாதுங்க
இப்போ நேரம் பத்து மணி இருக்குமுங்க
தமிழைச் சரியாகக் கற்றறியாதோர் புழங்கும் இத்தகைய சொற்களால் தற்காலிகமாகப் பல சொற்கள் சிதைக்கப்படுவதை முளையிலேயே கிள்ள வேண்டும். இவை நாளாந்த பாவனைச் சொற்கள் என்றும், வட்டார வழக்கென்றும் மக்கள் ஆதரிக்கும்போது, தமிழுக்கான தீங்கு நேர்கிறது.
தூர நோக்கில் இவற்றின் பாதிப்பு பெரியதாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
பல படைப்பாளிகள் கூட, இவற்றைத் தம் படைப்புகளில் உள்வாங்கித் தவறுகளை ஊக்கப்படுத்துவதும் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும்.
No comments:
Post a Comment